மாடர்ன் தியேட்டர் சர்ச்சை:
சேலம் ஏற்காடு சாலையில் அமைந்திருக்கும் மாடர்ன் தியேட்டர்ஸ், பல்வேறு வெற்றி திரைப்படங்களைக் கொடுத்த தயாரிப்பு நிறுவனம். மேலும், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்றவர்களுக்கு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியதும் இந்த திரைப்பட நிறுவனம்தான். திரைக்கூடம் அமைந்திருந்த இடத்தை, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் மற்றவர்களுக்கு விற்பனை செய்துவிட்டனர். தற்போது அந்த நிறுவனத்தின் நுழைவாயில் வளைவு மட்டுமே எஞ்சியிருக்கிறது.

சமீபத்தில் சேலத்துக்குச் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவுக்கு முன்பாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், அந்த நிறுவனத்துடன் கருணாநிதியுடனான நினைவுகளையும் பகிர்ந்து, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதோடு, அப்போது அந்த இடத்தின் உரிமையாளர்களை அழைத்து, அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஒரு சிலை வைப்பதற்குக் கோரிக்கையும் வைத்ததாகக் கூறப்பட்டது.
கருணாநிதிக்குச் சிலை:
இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்களான நிலையில், தற்போது சம்பந்தப்பட்ட இடம் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமானது என்று சொல்லி அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய நிலத்தின் உரிமையாளர் விஜயவர்மன், “மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளரிடமிருந்து என் தந்தை இந்த நிலத்தை விலைக்கு வாங்கிவிட்டார். அந்த இடத்தை இடித்து, ஒருபாதியை விற்பனையும் செய்துவிட்டோம். தற்போது அந்த வளைவுக்குப் பின்னால் ஒரு பகுதி இடம் மட்டுமே இருக்கிறது. என் தந்தையிடம் முன்னாள் முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டதன்படி, அந்த வளைவை இடிக்காது பாதுகாத்து வருகிறோம். முதல்வர் ஸ்டாலினும் `அந்த இடத்தைக் கொடுக்க விருப்பம் இருந்தால் கொடுங்கள்’ என்று சொல்லியிருந்தார்.

நானும் வீட்டில் கலந்தாலோசனை செய்துவிட்டுச் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன். பிறகு இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் என்னைப் பலமுறை அழைத்துப் பேசியிருந்தார். நானும் வீட்டில் பேசிவிட்டுக் கண்டிப்பாகப் பதில் சொல்கிறேன் என்று கூறியிருந்தேன். இந்தச் சூழலில்தான், கோரிமேடு பகுதியில் எங்களுக்குச் சொந்தமான ஓர் இடத்தை, குடிசை மாற்று வாரியத்துக்குச் சொந்தமான இடம் என்று சொல்லி, முன்னறிவிப்பு எதுவுமில்லாது அங்கிருந்த கட்டடங்களை இடித்தார்கள். அதோடு, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் அருகே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து, அந்த நுழைவாயில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கல்லை நட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து பிரச்னையை ஏற்படுத்தி வருகிறார்” என்று விரிவாகப் பேசியிருந்தார்.
அரசுக்குச் சொந்தமான இடம்:
இந்த விவகாரம் தொடர்பாக சேலம் நெடுஞ்சாலைக் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில், `மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு, கன்னங்குறிச்சி கிராம சாலை புறம்போக்கில் அமைந்திருக்கிறது. நெடுஞ்சாலையை ஒட்டிய நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான புல எண் எட்டில் விஜயவர்மன் அவரது நிலத்துக்குப் பாதை அமைக்கும்படி ஆக்கிரமித்திருக்கிறார். ஏற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்யப் பணி நடந்துவருகிறது. நெடுஞ்சாலை நில எல்லைகளை நிர்ணயம் செய்ய வருவாய் நெடுஞ்சாலை அலுவலர்களால் கடந்த 2-ம் தேதி தணிக்கை செய்யப்பட்டது. அதில், மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவுக்குப் பின்பக்கத்தில் வடபுறம் 1.05 மீட்டர், தென்புறம் 0.30 மீட்டர் இருந்தது.

வருவாய்த்துறை ஆவணங்களின்படி அரசு நிலத்தை வரையறுக்க நெடுஞ்சாலை எல்லையில், கடந்த நாள்களில் விஜயவர்மன் சொத்துகளுக்குப் பாதிப்பு ஏற்படாதபடி எல்லைக் கற்கள் அமைக்கப்பட்டன. அவரின் பட்டா நிலம் அளக்கப்படவில்லை. சாலை புறம்போக்கை வரையறை செய்து எல்லைக் கற்கள் அமைக்கப்பட்டன. இதில், அந்த வளைவு இருக்கும் இடம் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமானதாக இருப்பது உறுதியானது. இந்த நிலையில் விஜயவர்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில் விதிகளைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்து, வழக்கு முடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது. வேறு யாரும் உரிமை கூற முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடம்:
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், “அந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடம் என்பது அளவீடு செய்யும்போதுதான் தெரிந்தது. இடத்தின் உரிமையாளர்களிடம் தகவல் தெரிவித்த பின்னரே, அளவீடு கல் புதைக்கப்பட்டது. அதேபோல, குடிசை மாற்று வாரியத்தில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நிலம் வாங்கியிருக்கிறார். அந்த நிலத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்திலும் உரிய விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் தொடர்பாக நான் யாரையும் மிரட்டவும், பழிவாங்கவும் இல்லை” என்றார் தெளிவாக.
தி.மு.க அரசுமீது நிலம் அபகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது அந்த விவகாரத்தில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி இடம் வாங்கியதாகப் புகார் சொன்னவர் மீதே குற்றச்சாட்டு திரும்பியிருக்கிறது. உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது தொடர்பாக விவரமறிந்த சில சேலம் அரசு அதிகாரிகளிடம் பேசினோம். “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைதான் இந்த விவகாரத்தை ஏதோ நில அபகரிப்பு நடந்ததுபோல பெரும் பிரச்னையாகக் கிளப்பிவிட்டார். உண்மையில் இந்தப் பிரச்னை குறித்து அண்ணாமலை எந்த புரிதலும் இல்லாது தி.மு.க அரசைக் குறை சொல்லும் நோக்கத்தில் விமர்சனம் செய்துவிட்டார். சம்பந்தப்பட்ட இடம் அரசுக்குச் சொந்தமான இடம். அதனை அரசு மீட்பதில் எந்த தவறும் இல்லை. அண்ணாமலை குற்றம் சொல்வதால் அது அபகரிப்பு ஆகிவிடாது.
சிலை அமைக்கும் திட்டம் இல்லை:
அதேபோல, இடிக்கப்பட்டதாகச் சொல்லும் இடமும் குடிசை மாற்று வாரியத்துக்குச் சொந்தமான இடம். அதில் அவர்கள் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நிலம் வாங்கியிருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த நிலத்தில் உரிமையாளர்கள் ஏதோ அரசியல் அழுத்தம் காரணமாகச் செயல்படுவதுபோல தெரிகிறது. இது நீதிமன்ற அவமதிப்பு செயல். இந்த விவாகரத்தில் நில உரிமையாளர் கைதுசெய்யப்படக்கூட அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது. உண்மையில் பழைமை வாய்ந்த அந்த நுழைவாயிலை அப்படியே பாதுகாத்துப் பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம். அங்குச் சிலை திறப்பதற்கு எந்த திட்டமும் இல்லை. அரசுக்குச் சொந்தமான ஓர் இடத்தை நாங்கள் ஏன் நிர்ப்பந்தித்துக் கேட்டுப் பெறவேண்டும்” என்றார்கள்.

இது தொடர்பாகச் சேலம் தி.மு.க பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம். “நில உரிமையாளர்களிடம் முதல்வர் வற்புறுத்திக் கேட்கவில்லை. இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க அரசியல் செய்துகொண்டிருப்பது அண்ணாமலை மட்டுமே. ஆக்கிரமிப்பு நிலம் என்பதே அளவீடு செய்த பிறகுதான் சேலம் மாவட்ட நிர்வாகத்துக்கே தெரியவந்தது. உடனே நில அபகரிப்பு செய்கிறது தி.மு.க என்று தேவையில்லாத குற்றச்சாட்டைக் கிளப்பிவிட்டார்கள். நுழைவாயில் இடம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது. அது முழுக்க முழுக்க அரசுக்குச் சொந்தமான நிலம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல, அங்குச் சிலை அமைக்கும் எந்த திட்டமும் கிடையாது. உண்மையில் இந்த விவகாரத்தை மாவட்ட நிர்வாகம் மிகுந்த கவனத்துடன்தான் கையாண்டு வருகிறது” என்றார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.