ரோஹித் சர்மாவை கேப்டனாக்க அழைப்பு விடுத்த இந்த அணி? ஆனால் நடக்கவில்லை – ஏன் தெரியுமா?

IPL Auction 2024: ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே கிரிக்கெட் உலகம் முழுவதும் அதுகுறித்த பேச்சாகவே இருக்கிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் நாளை மறுநாள் (டிச. 19) துபாயில் நடைபெற உள்ள ஐபிஎல் (IPL) ஏலம் எனலாம். இருப்பினும், இந்த ஐபிஎல் ஏலம் மற்றும் டிரேடிங்கை சுற்றி நடந்த பல பரபரப்பான விஷயங்கள் தொடர் மீதான பேச்சுகளை அதிகப்படுத்தி உள்ளது எனலாம். 

குறிப்பாக, குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த ஹர்திக் பாண்டியாவை (Hardik Pandya) டிரேடிங் மூலம் கொத்தாக தூக்கி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஹர்திக் பாண்டியாவின் வருகையே பரபரப்பை உண்டாக்கிய நிலையில், தற்போது அவரை கேப்டனாக்கி சூழலே மாறி உள்ளது எனலாம். மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்கு  5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து இறக்கப்பட்டுள்ளார். 

இதுதான் மூத்த வீரர்கள் முதல் பல்வேறு தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு வந்த ரோஹித்தை உடனே தூக்குவது பெரிய காரணங்கள் இல்லை என்றாலும், கடந்த மூன்று சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற பேச்சுகள் மட்டும் எழுந்தது.

இருப்பினும், கடந்த சீசனில் குவாலிஃபயர் வரை முன்னேறிய ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியிடம் வீழ்ந்தது. மேலும், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி கிராஃப் கடுமையாக உயர்ந்துள்ளது எனலாம். 2022ஆம் ஆண்டில் மும்பையில் இருந்து கழட்டிவிடப்பட்ட ஹர்திக், குஜராத்தின் கேப்டன் பொறுப்பை வாங்கிய முதல் சீசனில் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுக்கொடுத்தார். மேலும், 2023இல் இறுதிப்போட்டி வரையும் குஜராத்தை அழைத்து வந்தார். இதுவும் ரோஹித்தை கழட்டி விட முக்கிய காரணம் எனலாம். 

இந்த அலையே ஓயாத நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. கார் விபத்தில் இருந்து மீண்டு வரும் தங்கள் கேப்டன் ரிஷப் பண்டை இம்பாக்ட் வீரராக பயன்படுத்திக்கொள்ளவும், களத்தில் செயல்படும் கேப்டனாக ஒருவரை தேடியும் டெல்லி அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் டிரேடிங் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் டெல்லி அணி ரோஹித் சர்மாவை டிரேட் செய்ய கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அணி இந்த டிரேடிங் ஆப்பரை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. 2013ஆம் ஆண்டு சீசனில் பாதியில் இருந்து ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்ஸி பொறுப்பை பெற்று, அதே சீசனில் முதல் கோப்பையையும் பெற்றுத் தந்தார். இதில், 2013ஆம் ஆண்டு மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரிக்கி பாண்டிங் அவரது பொறுப்பை ரோஹித்திடம் ஒப்படைக்குமாறு அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையிலேயே ரோஹித் கேப்டனாக்கப்பட்டு, அடுத்தடுத்து 5 கோப்பைகளை பெற்று தந்தார்.

தற்போது ரிக்கி பாண்டிங் டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் வேளையில் மீண்டும் ரோஹித்தை தன்வசம் இழுக்க அவர் முயற்சி மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | கில்லியாக சொல்லியடிப்பாரா கில்… ஏலத்தில் குஜராத்தின் பிளான் என்ன?
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.