IND vs SA 1st ODI: முன்னிலை பெறுமா இந்திய அணி? – போட்டி எப்போது, எங்கே பார்ப்பது?

India National Cricket Team: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி (IND vs SA 1st ODI) இன்று ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெறுகிறது. உலகக் கோப்பை தொடருக்கு முதல்முறையாக இந்திய அணி வெளிநாட்டில் விளையாடி வருகிறது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் நிறைவு பெற்றது. தற்போது ஒருநாள் தொடருக்கு பின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. 

முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி டிச.19 மற்றும் டிச.21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து தோல்வியே அடையாமல் 10 போட்டிகளை வென்று அசூர பலம் கொண்ட அணியாக விளங்கிய இந்திய அணி (Team India) இறுதிப்போட்டியில் சறுக்கி கோப்பையை தவறவிட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து ரோஹித் சர்மா (Rohit Sharma), விராட் கோலி (Virat Kohli) போன்ற முன்னணி வீரர்களே மீளாத நிலையில், தென்னாப்பிரிக்கா போன்ற பலம் வாய்ந்த அணியுடன் நடைபெறும் ஒருநாள் போட்டி மீது கவனம் குவிந்துள்ளது.

அந்த மூன்று வீரர்கள்

இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனாக கேஎல் ராகுலும் (KL Rahul), துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) நியமிக்கப்பட்டிருந்தனர். இதில், ஷ்ரேயாஸ் ஐயர் அடுத்து நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய டெஸ்ட் அணியுடனான பயிற்சியில் ஈடுபட செல்கிறார். எனவே, இன்றைய போட்டியில் மட்டுமே அவர் விளையாடுவார், இரண்டாவது, மூன்றாவது போட்டியில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உலகக் கோப்பையில் விளையாடிய கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ் ஆகியோர் மட்டுமே இந்த தொடரில் விளையாடுகின்றனர். 

அழுத்தத்தில் தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா அணிக்கும் இந்த தொடர் பெரும் அழுத்தம் வாய்ந்த தொடராக இருக்கும். உலகக் கோப்பையில் (ICC World Cup 2023) தொடர்ந்து வெற்றியை குவித்து வந்தாலும், லீக் சுற்றில் நெதர்லாந்திடமும், இந்தியாவிடமும் தோல்வியை கண்டது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் அடிவாங்கி வெளியேறியது. உலகக் கோப்பை தொடரில் விளையாடிய மார்க்ரம், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், கிளாசென், டேவிட் மில்லர், கேசவ் மகராஜ், அன்டைல் பெஹ்லுக்வாயோ, டப்ரிஷ் ஸம்சி ஆகியோர் தென்னாப்பிரிக்கா ஸ்குவாடில் உள்ளன. கேப்டனாக மார்க்ரம் செயல்படுகிறார். 

IND vs SA 1st ODI: எப்போது, எங்கே, எப்படி பார்ப்பது? 

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பெர்க் நகரில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஓடிடி தளத்திலும், தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) சேனலில் நேரலையாகவும் காணலாம். 

பிளேயிங் லெவன் கணிப்பு
 
இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், கேஎல் ராகுல் (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.

தென்னாப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், வியான் முல்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்சி, நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ்.

மேலும் படிக்க | முக்கிய வீரர் விலகல்… பின்னடைவை சந்திக்கும் இந்திய அணி – மாற்று வீரரும் அறிவிப்பு!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.