“வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” – டிடிவி தினகரன்

சென்னை: தென்மாவட்டங்களில் மிக கனமழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு, கூடுதல் மீட்பு படை வீரர்களை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாமல் கனமழை பெய்துவருகிறது. அம்மாவட்டங்களில் குடியிருப்புகளில் புகுந்திருக்கும் மழைநீர் மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் இல்லங்களை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு ஏராளமான மக்கள் முடங்கியுள்ளனர்.

தென்மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பெய்துவரும் கனமழை காரணமாக, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதையும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். தென்மாவட்டங்களில் மிக கனமழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு, கூடுதல் மீட்பு படை வீரர்களை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது அன்பு வேண்டுகோள். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருவதால், சாலைகளிலும் குடியிருப்புகளிலும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு முடங்கியுள்ளது. ஆகவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், என அனைத்து தரப்பு மக்களையும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்டு அவர்களுக்கு தேவையான நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை செய்திடுமாறு கழகத்தினரை இந்நேரத்தில் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.