பீஜிங், சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 118 பேர் பலியாகினர்; 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நம் அண்டை நாடான சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களின் எல்லை பகுதி யில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:59 மணிஅளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வீதிகளில் தஞ்சம்
ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், 10 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
கன்சு மாகாணத்தில் உள்ள லிங்சியா செங்குவான்ஜென் பகுதியில் இருந்து, 37 கி.மீ. தொலைவில் மற்றும் லான்ஜவ் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன புவியியல் ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.
அனைவரும் துாங்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சீட்டு கட்டுகளாக சரிந்து விழுந்தன. இதனால், இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர்.
ஒரு சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால், மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில், 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களைத் தொடர்ந்து, நேற்று காலை 9:46 மணிக்கு சின்ஜியாங் பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. இதில், 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் சாலைகள் கடுமையாக சேதம்அடைந்தன. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால், பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது.
இயல்பு வாழ்க்கை முடக்கம்
தொலைதொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டதால் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
பேரிடர் பாதித்த பகுதிகளில் மாகாண மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் பணியினர் தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள சீன அதிபர் ஜின்பிங் வலியுறுத்திஉள்ளார்.
கடந்த 2008-ல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 5,335 பள்ளி மாணவர்கள் உட்பட 87,000த்துக்கும் அதிகமானோர் சீனாவில் பலியானது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்