IPL: மும்பையின் மூத்த பௌலர் சிஎஸ்கே போகிறார்… பதிலுக்கு 2 பேர்; Pdogg – அஸ்வின் பேசியது என்ன?

IPL Auction 2024: எங்கு திரும்பினாலும் இந்த வாரம் முழுவதும் ஐபிஎல் மினி ஏலம் குறித்த பேச்சுக்கள்தான் உள்ளது. சென்னை அணி யாரை எடுக்கப் போகிறது, குஜராத் அணி இவ்வளவு தொகை வைத்துக்கொண்டு யாரை எடுக்கப்போகிறார்கள் என்ற கணிப்புகள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. குறிப்பாக சமூக வலைதள வல்லுநர்கள் தங்களின் கணிப்புகளையும் அள்ளிவீசி வருகின்றனர். 

புயலை கிளப்பிய Pdogg

அந்த வகையில், கிரிக்கெட் வல்லுநர் பிரசன்னா (Pdogg) அவரது யூ-ட்யூப் சேனலிலும், X தளத்திலும், ரவிசந்திரன் அஸ்வினின் யூ-ட்யூப் சேனலிலும் தொடர்ந்து ஐபிஎல் ஏலம் குறித்தும், திரைமறைவில் நடைபெற்று வரும் டிரேடிங் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். குறிப்பாக, கடந்த டிச.17ஆம் தேதி அவரின் X பதிவு ஒன்று புயலை கிளப்பியது. 

Trade discussions – 2 Indian seamers <=> star Indian batsmen / star ace Indian fast bowler. If this happens , a clear change in plans on auctions will be witnessed. Again if it happens , this will benefit both the teams immensely.

— Prasanna (@prasannalara) December 17, 2023

அவரது அந்த பதிவில்,”டிரேடிங் பேச்சுவார்த்தைகள்… 2 இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஈடாக ஒரு நட்சத்திர இந்திய பேட்டர் அல்லது ஒரு நட்சத்திர இந்திய வேகப்பந்துவீச்சாளர். இது நடந்தால் ஏலத் திட்டங்களில் பெரிய மாற்றம் ஏற்படும். இது நடந்தால் இரு அணிகளுக்கும் இது பெரிதும் பயனளிக்கும்” என குறிப்பிட்டிருந்தார்.

நீல சொக்கா vs மஞ்சள் சொக்கா

அதாவது, முன்னர் சொன்னதுபோல் இந்த ட்வீட்டே பெரிய புயலை கிளப்பிய நிலையில், அஸ்வினின் யூ-ட்யூப் சேனலில் நேற்று பேசியபோது, இந்த டிரேடிங் பேச்சுவார்த்தை யாருக்கு இடையில் நடக்கிறது என்பதற்கு கூடுதல் டிப்ஸையும் கொடுத்தார். அந்த வீடியோவில் அவர், நீல சொக்காவுக்கும், மஞ்சள் சொக்காவுக்கும் இடையில்தான் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறினார். ஆனால், அஸ்வின் நீல சொக்க குஜராத்தா அல்லது மும்பையா என விளையாட்டாக கேள்வி எழுப்பினார். 

ஆனால் அவற்றை வெளிப்படையாக அறிவிக்காத பிரசன்னா இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது, அந்த இரண்டு அணிகள் ஏலத்தில் எடுக்கும் வீரர்களை பொறுத்து இந்த டிரேடிங் நடைபெற்றுள்ளதா இல்லையா என்பதை நீங்கள் உறுதி செய்திக்கொள்ளலாம் என்றார். பிரசன்னா சொல்லும் அந்த திரைமறைவு பேச்சுவார்த்தையில் டிரேடிங் ஆகும் வீரர்கள் யார் யார் என்பது பலருக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. குறிப்பாக, வீடியோவில் பேதும்போது, இரண்டு அணிகளுமே வீரர்களை பெரிதாக கொடுக்கவே மாட்டார்கள் என அஸ்வின் பேசினார்.  இதற்கு முந்தைய வீடியோவில் சிஎஸ்கே, மும்பை அணிகளைதான் அஸ்வின் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

யார் அந்த வீரர்கள்?

அப்போது சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேதான் டிரேடிங் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக பிரசன்னா சொல்கிறார் என எடுத்துக்கொள்ளலாம். அப்படியென்றால் சென்னை அணியில் இருந்து 2 இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை கொடுத்து (தீபக் சஹார், முகேஷ் சௌத்ரி) மும்பை அணியில் இருந்து ஒரு இந்திய நட்சத்திர பேட்டர் (சூர்யகுமார் யாதவ்) அல்லது இந்திய நட்சத்திர பந்துவீச்சாளர் (பும்ரா) டிரேட் செய்யப்படுவார்கள் என பலரும் கருதுகின்றனர். பிரசன்னா அவரது Pdoggspeaks யூ-ட்யூப் சேனில் நேற்று வெளியிட்ட வீடியோவின் முகப்பு புகைப்படத்தில் ரோஹிரத் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோரை சிஎஸ்கே ஜெர்ஸியில் காட்டியுள்ளார்.

அஸ்வின் விளக்கம்

ஆனால், அஸ்வின் அதே வீடியோவில் பிரசன்னாவிடம் கூறியதாவது,”நான் நீங்கள் சொல்லும் அந்த இரண்டு பேரிடமும் பேசினேன், அப்படி ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அது வெறும் கற்பனைதான்” என்றார். இருப்பினும் அது மிகவும் ரகசியமாக நடப்பதால் இதுகுறித்து உங்களிடமே (அஸ்வின்) அவர்கள் சொல்வது கடினம்தான் என்று தான் பிரசன்னா பேசினார். 

எப்போது வரை டிரேடிங்

அவர் கூறியது போல் சிஎஸ்கே, மும்பை அணிகள் இன்றைய ஐபிஎல் ஏலத்தில் செயல்படுவதை பொறுத்து இந்த டிரேடிங்கை ஓரளவு புரிந்துகொள்ளலாம். ஏலம் முடிந்த அடுத்த நாளே (டிச. 20) டிரேடிங் ஆப்ஷன் தொடங்கிவிடும். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் வரை இந்த டிரேடிங் இருக்கும் என்பதால் நாளையே இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.