வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்திய மல்யுத்த சங்கத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷன் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்த நிலையில், மற்றொரு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, மத்திய அரசு அளித்த ‘பத்மஸ்ரீ’ விருதை திருப்பி ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சங்க (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக இருந்த பா.ஜ., எம்.பி., பிரிஜ் பூஷன் சிங், பாலியல் புகாரில் சிக்கினார். இவருக்கு எதிராக, மல்யுத்த நட்சத்திரங்கள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இதனால் மல்யுத்த சங்கத்தை தற்காலிக குழு நிர்வகித்தது. நிர்ணயித்த காலத்திற்குள் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு, சர்வதேச ஒருங்கிணைந்த மல்யுத்த கூட்டமைப்பு (யு.டபிள்யு.டபிள்யு.,) தடை விதித்தது.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் உட்பட பல தொடரில் இந்திய நட்சத்திரங்கள் தேசியக் கொடியுடன் பங்கேற்க முடியாமல் தவித்தனர். பல்வேறு தடைகளுக்குப் பின், நேற்று இந்திய மல்யுத்த சங்கத்திற்கு தேர்தல் (மொத்தம் 40 ஓட்டு) நடந்தது. இதில் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஆதரவாளர் சஞ்சய் சிங், 40 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து நின்ற முன்னாள் வீராங்கனை அனிதாவுக்கு 7 ஓட்டு மட்டும் கிடைத்தன. தவிர துணைத்தலைவர் உட்பட மொத்தமுள்ள 15 பதவிகளில், பிரிஜ் பூஷன் ஆதரவாளர்கள் 13ல் வெற்றி பெற்றனர்.
இதனால் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக கண்ணீருடன் அறிவித்தார் இந்தியாவின் சாக்ஷி மாலிக். ரியோ ஒலிம்பிக்கில் (2016) வெண்கலம் வென்ற இவர், பிரிஜ் பூஷன் ஆதரவாளர்கள் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்முடிவை எடுத்தார்.
பஜ்ரங் புனியா
இந்த நிலையில், மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா, மத்திய அரசு தமக்கு அளித்த ‘பத்மஸ்ரீ’ விருதினை பிரதமருக்கு திருப்பி ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார். பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், நீதிக்கான போராட்டத்தில் 12 மல்யுத்த வீராங்களை பிரிஜ் பூஷன் விரட்டியடித்ததாகவும், பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். பஜ்ரங் புனியா, ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement