IND vs SA, KL Rahul: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி (IND vs SA Boxing Day Test) நேற்று சென்சூரியன் சூப்பர்ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். மைதானம் அதிக ஈரப்பதத்துடன் காணப்பட்டதை அடுத்து போட்டி சற்று தாமதமானது. இந்திய அணியில் முக்கியமாக ஜடேஜா முதுகுபிடிப்பு காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை, அவருக்கு பதில் அஸ்வின் அணியில் இடம்பெற்றுள்ளார். பிரசித் கிருஷ்ணா அவர் அறிமுக டெஸ்ட் போட்டியை விளையாடுகிறரா்.
IND vs SA: முதல் நாள் ஆட்டம்
அந்த வகையில் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முழுமையாக நடைபெறவில்லை எனலாம். முன்னர் சொன்னதுபோல் அரைமணி நேரம் தாமதத்துடன் போட்டி தொடங்கியது. தேநீர் இடைவேளைக்கு பின்னர் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மூன்றாவது செஷனும் முழுமையாக வீசப்படவில்லை. நேற்று வீசப்பட்ட 59 ஓவர்களில் இந்திய அணி 208 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கேஎல் ராகுல் 70 ரன்களுடன், சிராஜ் ரன் கணக்கை தொடங்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்திய அணி இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இந்திய அணி இன்று 52 பந்துகள் (8.4 ஓவர்கள்) தாக்குபிடித்தது. அதில் இந்திய அணி 37 ரன்களை குவித்தது. குறிப்பாக கேஎல் ராகுல் 101 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக சிராஜ் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மொத்தமாக இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ரபாடா 5 விக்கெட்டுகளையும், பர்கர் 3 விக்கெட்டுகளையும், கோட்ஸி மற்றும் யான்சன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கேஎல் ராகுல் மிரட்டல் சதம்
அடுத்து தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தொடங்கிய நிலையில், உணவு இடைவேளை வரை 16 ஓவர்களுக்கு 1 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்களை எடுத்துள்ளது. மார்க்ரம் 5 ரன்களில் சிராஜிடம் வீழ்ந்தார். டீன் எல்கர் 29 ரன்களுடனும், ஸோர்ஸி 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தென்னாப்பிரிக்கா அணி 196 ரன்கள் இந்தியாவை விட பின்தங்கி உள்ளது. பும்ரா, சிராஜ், ஷர்துல், பிரசித் கிருஷ்ணா, அஸ்வின் என ஐந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசிவிட்டது குறிப்பிடத்தக்கது.
போட்டி பரபரப்பாக சென்றுகொண்டிருக்க கேஎல் ராகுலின் சதம் என்பது பேசப்பட வேண்டியது எனலாம். குறிப்பாக இந்திய முன்னணி பேட்டர்கள் விராட் கோலி, ஷ்ரேயாஸ், ரோஹித் ஆகியோரே ரன் எடுக்க திணறிய வேளையில், கேஎல் ராகுல் பொறுமையாகவும் முழு கவனத்துடனும் ரன் குவித்தது மூத்த வீரர்களால் பாரட்டப்பட்டு வருகிறது. இது அவரின் 8ஆவது டெஸ்ட் சதமாகும், குறிப்பாக அவற்றில் 7 சதத்தையும் அவர் அந்நிய மண்ணில்தான் பதிவு செய்துள்ளார். அவர் மீதான அத்தனை விமர்சனங்களுக்கும் அவர் பதிலடி கொடுத்தார் எனலாம்.
சிறந்த சதம்
இவரின் இந்த சதம் குறித்து தொலைக்காட்சி வர்ணனையின்போது மூத்த இந்திய வீரர்கள் ரவி சாஸ்திரி மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் வேறு வேறு கருத்துகளை தெரிவித்தார். அதாவது, கேஎல் ராகுல் அடித்த டெஸ்ட் சதங்களிலேயே இதுதான் சிறந்த சதம் என ரவி சாஸ்திரியும், இந்திய டெஸ்ட் வரலாற்றின் டாப் 10 டெஸ்ட் சதங்களில் இதுவும் ஒன்றும் என சுனில் கவாஸ்கரும் தெரிவித்தனர். இதன்மூலம், இந்த சதத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.
ஆனால், அவர்கள் சொல்வது சரியா என்று உறுதிப்படுத்துவது சற்று கடினம்தான். ஆனால், 2021ஆம் ஆண்டிலும் சென்சூரியனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஓப்பனராக களமிறங்கிய கேஎல் ராகுல் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், சென்சூரியனில் ராகுல் அடித்த இரண்டு சதங்களில் எது சிறந்தது என்று இதில் பார்க்கலாம்.
அன்றும் இன்றும்…
2021ஆம் ஆண்டிலும் இதே நாளில், இதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 218 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸ் என 113 ரன்களை கேஎல் ராகுல் அடித்தார். அதுமட்டுமின்றி, அவர் மயாங்க் அகர்வாலுடன் இணைந்து 117 ரன்களுக்கு நல்ல ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தார்.
ஆனால், இன்று அவர் விக்கெட் கீப்பர் பேட்டராக 5ஆவது இடத்தில் களமிறங்கி, இந்திய அணியை சரிவில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளார். குறிப்பாக, கீழ் வரிசை பேட்டர்களை சரியாக ஒருங்கிணைத்து ஸ்கோர்போர்டையும் சரிவர பார்த்துக்கொண்டார் எனலாம். இன்றைய போட்டியில் அவர் 137 பந்துகளில் 14 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 101 ரன்களை அடித்துள்ளார். இதன்மூலமே, தெரிந்துவிடும் அவரின் இன்றைய சதத்தின் தரம். அதுமட்டுமின்றி இதுதான் அவரின் சிறந்த டெஸ்ட் சதம் என்ற ரவி சாஸ்திரியின் கருத்தும் வலுபெறும்கிறது.