Thalapathy 68: டைட்டில் அப்டேட்; ஹைதராபாத்தில் ஃபைட்; ஶ்ரீலங்காவில் டூயட் – அதிரடி ஷூட்டிங்

2024 புத்தாண்டை விஜய்யின் ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இயக்குநர் வெங்கட்பிரபு கிறிஸ்துமஸ் வாழ்த்தாக, அப்டேட்கள் விரைவில் வந்துகொண்டிருக்கின்றன என சமூக வலைத்தளத்தில் சொல்லிவிட்டதால், இன்னும் உற்சாகத்தில் இருக்கிறார்கள் ‘தளபதி 68’ ரசிகர்கள். படத்தின் அப்டேட்கள் குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி…

‘தளபதி 68’ பூஜையின் போது..

‘லியோ’வுக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் எனப் பறந்த யூனிட், அடுத்தும் அதிரடியான லொகேஷன்களில் படமாகவிருக்கிறது. விஜய்யின் சமீபத்திய படங்களான ‘வாரிசு’, ‘லியோ’ படங்களைப் போல, ‘தளபதி 68’ படத்திலும் நட்சத்திரப் பட்டாளம் குவிந்து வருகிறது. மாளவிகா ஷர்மாவை அடுத்து, ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருக்கிறார்.

விஜய்யுடன் லாரன்ஸ்

ஏற்கெனவே பிரசாந்த், பிரபு தேவா, ‘மைக்’ மோகன், சினேகா, லைலா, மீனாக்ஷி சௌத்ரி, ஜெயராம், யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் எனப் பலர் உள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யின் ‘புதிய கீதை’ படத்திற்குப் பின், விஜய்யுடன் யுவன் இணைந்திருக்கிறார். 19 வயது இளைஞர் தோற்றத்தில் விஜய் நடித்து வரும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்தின் ஆலோசனைப்படி இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமான சண்டைக்காட்சியும் ஷூட் செய்யப்பட்டிருக்கிறது.

‘துப்பாக்கி’ படத்திற்குப் பின் ஜெயராமுடன் நடிக்கிறார் விஜய். சென்னை ஷெட்யூலில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா எனப் பலரும் பங்கேற்றனர். அதே போல தாய்லாந்து படப்பிடிப்பில் ஜெயராம், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி எனப் பலரின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. வெங்கட்பிரபுவின் நலம் விரும்பியும், தயாரிப்பாளருமான டி.சிவா, சமீபத்தில் ‘தளபதி 68’ விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். தாய்லாந்து படப்பிடிப்பைத் தொடர்ந்து அடுத்து இலங்கை பறக்கிறார்கள். அங்கே விஜய்- மீனாட்சி சௌத்ரி நடிக்கும் டூயட் பாடலைப் படமாக்க உள்ளனர்.

விஜய்

இதையெல்லாம்விட, முக்கியமானது வரும் புத்தாண்டு தினத்தன்றோ அல்லது டிசம்பர் 31ம் தேதி அன்றோ படத்தின் டைட்டிலை அறிவிக்கின்றனர். ஐந்து தலைப்புகள் பரிசீலனையில் உள்ளது. அதில் ‘G.O.A.T’ என்ற தலைப்பும் பரிசீலிக்கப்படுகிறது. புத்தாண்டு ஸ்பெஷலாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர் என்றும் சொல்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.