Vijayakanth: "அந்த நாட்களை மறக்கமுடியாது"- நடிகர் நெப்போலியனின் உருக்கமான பதிவு

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று மரணமடைந்தார். 

அவரின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் உருக்கமாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர் . அந்தவகையில் அவருடன் திரையுலகில் பயணித்த நடிகர் நெப்போலியனும் உருக்கமானப் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

விஜயகாந்த், நெப்போலியன்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ அமெரிக்காவில் இருந்து ஓர் இரங்கல் செய்தி! உலகில் வாழும் அனைத்து தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது பணிவான வணக்கம். தேமுதிகவின் தலைவரும் , கேப்டன் என நம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும், நமது அன்பு அண்ணன் திரு விஜயகாந்த் அவர்கள் மறைவு செய்தி கேட்டு நாங்கள் அதிர்ச்சியுற்றோம். மிகவும் வேதனையும் , வருத்தமும் அடைந்தோம். அன்புச் சகோதரி குஷ்பு அவர்களும், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவர்களும் எனக்குத் தொலைபேசியில் அழைத்து அண்ணன் விஐயகாந்த் அவர்களின் மறைவு குறித்து தகவல் சொன்னார்கள். இன்னும் அதிக நாள் இருந்து திரைப்படத் துறைக்கும், நமது நாட்டிற்கு நிறைய செய்யவேண்டிய ஒரு நல்ல நடிகரையும், ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்துவிட்டோம்.

அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்கக் கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் என, எண்ணிலடங்காத செயல்களை எல்லாம் அவருடன் நண்பர் சரத்குமார் அவர்களும் , நானும் கடினமாக உழைத்து , வெற்றி கண்டு கடந்து வந்த பாதைகளை எல்லாம் , எங்களால் என்றும் ,எதையும் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலாது.

கடந்த ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்த போது , அவரைச் சந்திக்க அனுமதி கேட்டு, அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து உடல் நலம் விசாரித்தது, மகிழ்வோடு பழைய நினைவுகளை எல்லாம் பேசி அவரை மகிழ்வித்தது , இன்றும் எனது மனதில் நேற்று நடந்தது போல இருக்கிறது.  வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அவரது நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்களையும் , வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.” என்று தனது இரங்கலை விஜயகாந்திற்கு தெரிவித்திருக்கிறார் .



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.