நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார்.
விஜயகாந்தின் ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ போன்ற படங்களை இயக்கிய அரவிந்த்ராஜிடம் பேசினேன்.
திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு பெரியதொரு பாதையை அமைத்துக் கொடுத்த படம் ‘ஊமை விழிகள்’. போலீஸ் அதிகாரி தீனதயாளன் ரோலுக்கு விஜி (அப்போது திரையுலகிலகினர் விஜயகாந்தை ‘விஜி’ என்றுதான் அழைப்பார்கள்) கிடைத்தார். 1984-ல் தொடங்கப்பட்ட படம், விஜயகாந்த் சாரிடம் வெறும் ஏழு நாள்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும்னு சொல்லி ஆரம்பிச்சோம். அவர் 70 நாள்களுக்கு மேலாக நடிச்சுக் கொடுத்ததுடன் கிட்டத்தட்ட தயாரிப்பாளராகவும் இருந்து படத்தை முடிச்சுக் கொடுத்து உதவினார். 1986 ஆகஸ்ட் 15-ல் படம் வெளியாகி எங்கள் எல்லோரின் வாழ்க்கையிலும் வசந்தம் வீச வைத்தது.

இந்த வருஷம் அவரோட பிறந்த நாளன்று விஜயகாந்த் சாரை சந்திச்சேன். அவரோட உடல்நிலை சமீபகாலமாகவே பாதிப்பில தான் இருந்தார். அவரைப் பத்தி என்னிடம் நலம் விசாரிக்கவங்ககிட்ட ஒரு விஷயத்தைச் சொல்வேன். ‘கர்ணன்’ படத்துல கர்ணனுக்கு நெஞ்சுல அம்புபட்டிருக்கும். அவர் செய்த தர்மத்தினால், தர்ம தேவதை மட்டும் அவரை காத்துநிற்கும். அப்படித்தான் கேப்டனை தர்மம் காத்திட்டு இருக்குது சொன்னேன். அவர் ஆஸ்பத்திரி போனதும் மீண்டு வந்துடுவார்னு நினைச்சேன். இப்படி ஆகும்னு நினைக்கல. காலையில பேரதிர்ச்சியான செய்தியாகிடுச்சு. அவர் மறுபடியும் வீட்டுக்கு வந்திடுவார். வீட்டுல இருப்பார். அவர் இருக்கிறார்ங்கற செய்தி மட்டும் போதும்னு நினைச்சிருந்தேன். நல்ல மனிதரை இழந்துட்டோம்.

அவராலதான் எனக்கு சினிமா வாழ்க்கை அமைந்தது. அவருக்கும் எனக்குமான மறக்க முடியாத விஷயம் ஒண்ணு. ஒருமுறை சென்னையில எனக்கு சின்ன பிரச்சனை ஒண்ணு ஆகிடுச்சு. அது தேவையில்லாத பிரச்னை. அது சிறுக சிறுக வளர்ந்து அடிதடி வரை வளர்ந்து, அரசாங்கம் வரை போயிடுச்சு. அந்த சமயத்துல எனக்கு பக்கபலமா நின்னது அண்ணன் விஜயகாந்த் தான். அவர் தான் முழு சபோர்ட் ஆக நின்னார். அந்த பிரச்னையை அவர் தீர்த்து வச்சதும், அவரை பத்தி ஒரு விழாவில் நான் பேசும்போது, ‘கேப்டன் எனக்கு அண்ணன் மாதிரி. அவர் இருக்கார்னு நம்பிக்கையிலதான் நான் தைரியமா இருக்கேன். எப்பவும் அவர் நியாயத்தின் பக்கம் நிற்பார்’னு சொன்னேன். அதே மேடையில் இருந்த கேப்டன், ‘அரவிந்த்ராஜ் பேசுறப்ப, அவர் அண்ணன் மாதிரினு சொன்னாரு. ஆனா, அவர் எனக்கு தம்பி மாதிரி இல்ல. தம்பி!’னு சொன்னார். என்னால அந்த தருணத்தை மறக்கவே முடியல சார்” -குரல் உடைந்து அழுகிறார் அரவிந்த்ராஜ்.