புதுடெல்லி: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் பதவியை ராஜிவ் ரஞ்சன் சிங் எனும் லாலன் சிங் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அப்பொறுப்பை நிதிஷ் குமார் ஏற்றுக்கொண்டார்.
பிஹாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக பதவி வகித்தவர் லாலன் சிங். இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்று வரும் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அவர் தனது ராஜினாமாவை அளித்தார். எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக லாலன் சில் தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதிஷ் குமார் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிகார் அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி,“ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டம் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், தலைவர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக முதல்வர் நிதிஷ் குமாரிடம் லாலன் சிங் தெரிவித்தார். இதையடுத்து, அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது. கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என கூறினார். ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் பதவியை லாலன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்தி வெளியான நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இண்டியா கூட்டணியின் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் நடைபெற்று வரும் அரசியல்சாசன அரங்கின் முன் திரண்டுள்ள தொண்டர்கள், நிதிஷ் குமாரை பிஹார் அங்கீகரித்துள்ளது; அடுத்து நாடும் அவரை அங்கீகரிக்கும் என கோஷங்களை எழுப்பினர். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலையும், அதற்கு அடுத்த ஆண்டு பிஹார் சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில், கட்சியின் தலைமைப் பொறுப்பை நிதிஷ் குமார் ஏற்றுள்ளார்.