Hamas deputy leader Saleh al-Arouri killed in Beirut blast | ஹமாஸ் துணை தலைவர் லெபனானில் கொலை: உச்சம் தொடும் போர் பதற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் சலே அல்-அரூரி உயிரிழந்ததாக லெபனான் மற்றும் பாலஸ்தீன பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனால் போர் தீவிரமாகும் என தெரிகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் சூழலில் ஹமாஸ் போராட்டக் குழுவின் நிறுவனர்களில் ஒருவரும் துணை தலைவருமான சலே அல்-அரூரி, மேற்குக் கரையில் உள்ள குழுவிற்கு தலைமை தாங்கி வந்தார். இந்நிலையில், நேற்று (ஜன.,2) பெய்ரூட்டில் இஸ்ரேலிய ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் குழுவின் துணை தலைவர் சலே அல் அரூரி மற்றும் மூன்று பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, இஸ்ரேலிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருந்தால், அது மத்திய கிழக்கு மோதலை பெரிதுப்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், சலே அல் அரூரி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரூரி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கக் கோரி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலஸ்தீனத்தின் அதிபர் மஹ்மோத் அப்பாஸ் உடன் நல்லுறவு கொண்டிருந்த அரூரி, போட்டி குழுக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயன்று வந்தார். இதனிடையே, லெபனானில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் குறிவைத்தால் பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா உறுதியளித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.