தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் அமைகிறது மின்வாகன, மின்கலன் உற்பத்தி தொழிற்சாலை | உலக முதலீட்டாளர் மாநாடு 2024

சென்னை: உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான ‘வின்ஃபாஸ்ட்’ (VinFast) தமிழகத்தில் தொழில் தொடங்குவதை உறுதி செய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் இவி கார் (EV Car) மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை வின்ஃபாஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast தமிழகத்தில் தொழில் தொடங்குவதை உறுதி செய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் EV Car மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது.

இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல். தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் VinFast நிறுவனத்தாருக்குத் தமிழகத்தின் முதல்வராக எனது மனமார்ந்த நன்றிகள்.உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 -இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தும் இலக்கை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்தார். அந்த இலக்கை நோக்கியே, நாளை முதல் 2 நாட்களுக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்த மைய வளாகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தொடங்கிவைக்கிறார். இதில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்புரையாற்றுகிறார். அவரது முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த மாநாட்டில் பங்கேற்க 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ஆகிய நாடுகள் இம்மாநாட்டின் பங்குதாரர்களாக உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.