யஷ்வந்த்பூர் : பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை கண்டபடி திட்டிய இளைஞர் மீது, யஷ்வந்த்பூர் ஆர்.எம்.சி., யார்டு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு மெட்ரோபாலிடன் டாஸ்க் போர்ஸ் எஸ்.பி.,யாக இருப்பவர் ஐ.பி.எஸ்., அதிகாரி ஷோபா ராணி. இவர், நகரின் கோரகுண்டே பாளையா சதுக்கம் அருகில், அரசு காரில் சென்று கொண்டிருந்தார்.
பின்னால், வேகமாக வந்த பைக், அவரது கார் மீது மோதியது. காரை ஓரத்தில் நிறுத்தி, பைக் ஓட்டுனரிடம் விசாரிக்கும்படி, தன் கார் ஓட்டுனரிடம் பெண் அதிகாரி கூறியுள்ளார்.
அப்போது, கார் ஓட்டுனருடன் பைக் ஓட்டுனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வேளையில், ஐ.பி.எஸ்., அதிகாரி கீழே இறங்கி வந்து, பேச முயன்றுள்ளார். ஆனால், அவரையும் தகாத வார்த்தையால் கண்டபடி திட்டியுள்ளார்.
தான் பிரபல பட்டய கணக்காளர் மகன் அபிஷேக், 22, என்று கூறி மிரட்டியதாக தெரிய வந்துள்ளது.
உடனே அப்பகுதியினர் கூட்டம் சேர்ந்ததால், அருகில் இருந்த போக்குவரத்து போலீசார் ஓடி வந்து, பைக் ஓட்டுனரை, யஷ்வந்த்பூர் ஆர்.எம்.சி., யார்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சென்று அதிகாரி, தன்னை திட்டியவர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி புகார் அளித்தார். அவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவம், தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்