"சசிதரூரை வெல்ல யாராலும் முடியாது!" – காங்கிரஸ் எம்.பி-யை புகழ்ந்த பாஜக மூத்த தலைவர்!

கேரள மாநில பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவர் ஓ.ராஜகோபால். முன்னாள் மத்திய அமைச்சரான ஓ.ராஜகோபால், கேரள மாநில சட்டசபை தேர்தலில் நேமம் தொகுதியில் வென்று முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப் பெற்றவர். ஓ.ராஜகோபாலுக்கு பிறகு கேரளாவில் இதுவரை பா.ஜ.க-வுக்கு எம்.எல்.ஏ-க்கள் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார் ஓ.ராஜகோபால். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வெற்றி பெற்று எம்.பி ஆனார். இந்த நிலையில் காங்கிரஸ் சீனியர் தலைவரான சசிதரூருக்கு என்.ராமச்சந்திரன் பவுண்டேஷன் சார்பில் விருது வழங்கும்  நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடந்தது. விருது பெறுவதற்கு சசிதரூர் மேடையில் அமர்ந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  பா.ஜ.க மூத்த தலைவர் ஓ.ராஜகோபால்  கலந்துகொண்டு பேசுகையில், “திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரை யாராலும் தோற்கடிக்க முடியாது.

பா.ஜ.க மூத்த தலைவர் ஓ.ராஜகோபால்

பாலக்காட்டைச் சேர்ந்த சசிதரூரின் புகழை உலகம் அங்கீகரிக்கிறது.  சசிதரூர் திருவனந்தபுரம் மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். அதனால்தான் திருவனந்தபுரத்தில் சசிதரூர் மீண்டும், மீண்டும் வெற்றிபெறுகிறார். வரும் தேர்தல்களில் சசிதரூரை வெல்ல வேறு யாராலும் முடியாது என்றே நான் கருதுகிறேன். சசிதரூரின் சேவை தொடரட்டும்” என்றார்.

சசிதரூர்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் சசிதருரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஓ.ராஜகோபால் இப்படி பேசியுள்ளது பா.ஜ.க-வில் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதிலும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட இந்த சமயத்தில் எதிர் அணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி சசிதரூரை பா.ஜ.க மூத்த தலைவர் புகழ்ந்திருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது. நவம்பர் மாதம் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கேரளீயம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் ஓ.ராஜகோபால். இப்போது புதிய சர்ச்சையை பற்றவைத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.