புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு பதிலாக ரூ.500 பணம் தருவது தொடர்பான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்து பொங்கல் பொருட்களுக்கு பதிலாக நேரடியாக வங்கி கணக்கில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்புக்கான தொகை செலுத்தப்பட்டது.
2021-ல் என்ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் 2022 பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2023-ம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு பொருட்கள் தொகுப்புக்கு பதிலாக அரசு பணம் வழங்க திட்டமிட்டது. அதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மூலமாக வழங்கப்படும் பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு பதிலாக ரூ.500 பணம் வழங்குவது தொடர்பான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று இரவு ஒப்புதல் அளித்தார்.
அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள – அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ குடும்ப அட்டைதாரர்கள் அல்லாத அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் (10 மளிகை பொருட்கள் அடங்கிய) பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு ஈடாக தொகை ரூ.500 அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இது புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 3,38,761 அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். பொங்கலுக்கு முன்பாகவே இந்த தொகையை பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த அரசு ஆயத்தமாகி வருகிறது.