India Vs Maldives Row: சர்ச்சைக் கருத்து; பூதாகரமான பிரச்னை- சீனாவிடம் வேண்டுகோள் விடுத்த மாலத்தீவு!

இந்தியாவிலிருந்து மிக அருகில் இருக்கும் சுற்றுலாத் தலமாக மாலத்தீவு கருதப்படுகிறது. மேலும், மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023-ம் ஆண்டில் மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்த நாடுகளில் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன. இந்தியாவிலிருந்து 2,09,198 பேரும், ரஷ்யாவிலிருந்து 2,09,146 பேரும், சீனாவிலிருந்து 1,87,118 பேரும் சுற்றுலாப் பயணிகளாக வந்திருக்கின்றனர்.

மாலத்தீவு

இந்த நிலையில், சமீபத்தில், பிரதமர் மோடி இரண்டு நாள்கள் பயணமாக லட்சத்தீவுக்குச் சென்றுவந்தார். தனது லட்சத்தீவு பயணம் குறித்த அனுபவங்களை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரதமர், லட்சத்தீவு பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோவையும் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. மோடியின் பயணத்தைத் தொடர்ந்து, கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக `லட்சத்தீவு’ மாறியது.

இந்த நிலையில், மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையில், ‘மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி முயல்கிறார். மாலத்தீவை இந்தியா குறிவைக்கிறது’, `இஸ்ரேலின் ஊதுகுழல்’ என விமர்சித்து கருத்துகள் தெரிவித்தனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே சர்ச்சை வெடித்தது.

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு

இதற்கிடையில், சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்த மூன்று அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்தது. அமைச்சர்களின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில், மாலத்தீவுக்குச் செல்லும் திட்டத்தை இந்தியர்கள் ரத்து செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சீனாவின் புஜியான் மாகாணத்தில் மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் உரையாற்றிய மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, “சீனா எங்களின் நெருங்கிய நட்பு நாடு. எங்களின் வளர்ச்சி பங்காளிகளில் ஒன்று.

2014-ம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின் பிங்கால் தொடங்கப்பட்ட பெல்ட் அண்ட் ரோடு (பிஆர்ஐ) முன்முயற்சி திட்டம், மாலத்தீவு வரலாற்றில் காணப்பட்ட மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சீனா, மாலத்தீவின் சுற்றுலா வணிகத்தில் கொரோனாவுக்கு முன்பு வரை முதலிடத்திலிருந்தது. சீனா அதே நிலையை மீண்டும் எட்டுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள். சீன சுற்றுலாப் பயணிகள் எங்கள் நாட்டுக்கு அதிக அளவில் வருகை புரிய வேண்டும்” எனப் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.