மூணாறு:’ எனக்கு எதிராக ஐந்து முறை கொலை முயற்சி நடந்தபோது 35 வயதில் ஏற்படாத அச்சம் தற்போதைய மிரட்டலால் இல்லை’ என கேரள கவர்னர் ஆரிப் முகம்மதுகான் பேசினார்.
இடுக்கி மாவட்டத்தில் கேரள வியாபாரி விவசாயி ஏகோபன சமிதி எனும் வர்த்தக சங்கம் சார்பில் வர்த்தகர்களில் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை தொடுபுழாவில் நேற்று துவக்கி வைத்து அவர் பேசியதாவது: இதற்கு முன் எனக்கு எதிராக ஐந்து முறை கொலை முயற்சி நடந்தது. அப்போது ஏற்படாத அச்சம் இப்போது இல்லை. மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தபோது எனக்கு வயது 35. 1985, 86, 87 கால கட்டத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்களை எதிர் கொண்டேன். 1990ல் நடந்த கொலை முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது. இரும்பு கம்பியால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இப்போது மிரட்டல்கள் உள்ளதா என கேட்டால் அதற்கு பதில் 35 வயதில் தோன்றாதது 72 வயதில் தோன்றுமா என்பதாகும். எனது வயது ஆயுள் காலம் தேசிய சராசரியை கடந்து விட்டது. அதிகமாக கிடைத்த காலகட்டத்தில் வாழ்கிறேன். அதனால் அச்சம் எதுவும் இல்லை. மாவட்டத்தில் இன்று (நேற்று) எதற்கு பந்த் என்பது தெரியாது. நான் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல. அரசியல் அமைப்புக்கும், பொதுமக்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன். நிலம் சட்ட திருத்த மசோதா குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்காததால் கையெழுத்திடவில்லை என்றார்.
கருப்புக்கொடி
இடுக்கி மாவட்டத்தில் கவர்னருக்கு எதிராக நேற்று ஆளும் கூட்டணி கட்சியினர் சார்பில் பந்த் நடந்ததாலும், தொடுபுழாவில் அவருக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த இளைஞர், மாணவர் அமைப்பினர் கருப்பு கொடி காட்ட உள்ளதாக தெரிய வந்ததாலும் எஸ்.பி. விஷ்ணுபிரதீப் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதனையும் மீறி எட்டு இடங்களில் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement