'ஓவர் எக்ஸ்போஸ்' ஆகிவிட்டேன் – விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கியவர் விஜய் சேதுபதி. தனி கதாநாயகனாக வசூல் ரீதியாக '96' படத்திற்குப் பிறகு அவருக்கு பெரிய வெற்றி அமையவில்லை. அதன்பின் வெளிவந்த கமர்ஷியல் படங்களான “சிந்துபாத், சங்கத் தமிழன், லாபம், மாமனிதன், டிஎஸ்பி, யாதும் ஊரே யாவரும் கேளிர்” ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை. 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. “சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி” ஆகிய படங்கள் அவார்டு படங்கள் என முத்திரை குத்தப்பட்டது.

“க பெ ரணசிங்கம், அனபெல் சேதுபதி” படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகின. 'துக்ளக் தர்பார்' படம் தியேட்டர்கள், ஓடிடி என வராமல் நேராக டிவி ஒளிபரப்புக்கு மட்டுமே சென்றது. 'மாஸ்டர், விக்ரம்' படங்களில் வில்லனாக நடித்திருந்தார். தெலுங்கில் 'உப்பெனா' படத்திலும், ஹிந்தியில் 'ஜவான்' படத்திலும் வில்லனாக நடித்தார். 'விடுதலை 1' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். டிவியில் சமையல் ஷோ தொகுத்து வழங்கினார். 'பார்சி' என்ற ஹிந்தி வெப் தொடரில் நடித்தார்.

தற்போது ஹிந்தி, தமிழில் உருவாகியுள்ள 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தில் நடித்துள்ளார். அப்படத்திற்காக புரமோஷன்களை செய்து வருகிறார். ஹிந்தி குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததும் சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் 'ஓவர் எக்ஸ்போஸ்' ஆகிவிட்டதாக வருத்தப்பட்டுள்ளார்.

“என்னைப் பற்றியும், எனது படங்களைப் பற்றியும் அதிகம் பேசுவதால் அதிகமாக 'எக்ஸ்போஸ்' ஆகிவிட்டதாக பயப்படுகிறேன். இதனால் ரசிகர்களுக்கும் எனக்குமான தொடர்பு விலகிவிடுமோ என அச்சமாக உள்ளது. எனது படங்களைப் பார்க்கும் போது அவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எனது இன்ஸ்டாகிராமில் கூட என்னைப் பற்றிய சில தனிப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே இருக்கும். முன்பெல்லாம் ஒரு சில விருது நிகழ்வுகள்தான் இருக்கும், அதனால் நடிகர்களை எப்போதோ ஒரு முறை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால், இப்போது நிறைய நடக்கிறது, அது பயமாக உள்ளது.

பேட்டிகள் கொடுக்கும் போது கேட்ட கேள்விகளையே திரும்பக் கேட்கிறார்கள். அதற்கு பொருத்தமான பதிலை நான் யோசிக்க வேண்டும். அந்த சமயங்களில் மூளை வேலை செய்யாது. அதனால், அமைதியாக இருப்பதே சிறந்தது. எனது படங்களைப் பார்த்து என்னை புத்திசாலி என யாராவது நினைத்தால் அது அப்படியே இருக்கட்டும். யாரோ ஒருவரது எண்ணத்தில் நாம் புத்திசாலியாகவும், அறிவாளியாகவும் இருப்பது நல்லதுதான். ஒரு அமைதியான நடிகராக வந்து காட்டுவதை விட இது சிறந்தது. இது அடக்கமான பதிலல்ல, உண்மையானது,” எனப் பேசியுள்ளார்.

சிறப்புத் தோற்றங்களில் சில படங்களில் நடித்தது, வில்லனாக நடித்தது ஆகியவைதான் தனக்கான தனிப்பட்ட வெற்றியைப் பாதித்துள்ளது என கடந்த வருடம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.