தூத்துக்குடி: "இப்படி ஒரு வெள்ளத்த பாத்ததில்ல..!" – இன்னும் வெள்ள நீர் வடியாத வெள்ளாளன்விளை கிராமம்

தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18, 19 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆயிரக்கணக்கான மக்கள் தம் வாழ்வாதாரங்களை இழந்தனர். பல்வேறு கிராமங்கள் வெளியுலகத் தொடர்பில்லாமல் தனித்து விடப்பட்டிருந்தன. தற்போது தான் சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, நிலைமை சீராகத் தொடங்கியுள்ளது. ஆனால் இன்னும் சில ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் கூட வடியாமல், மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். தங்கள் உடைமைகளை இழந்து, கண்முன்னே ஆசை ஆசையாய் கட்டிய வீடுகள் வெள்ள நீருக்குள் கிடப்பதைக் கண்டு நொந்து வருகின்றனர். அன்றாடம் சாப்பாட்டிற்குக் கூட கஷ்டப்பட்டு யாரோ அளித்த உதவியினால் தங்கள் காலத்தை ஓட்டி வருகின்றனர்.

இப்படியாக வெள்ள பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத திருச்செந்தூர் அருகே உள்ள வெள்ளாளன் விளைக்குச் சென்றோம். இந்த ஊர் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடைய சொந்த ஊரான தண்டுபத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த ஊருக்குள், சடையநேரிக் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பினால் கடந்த டிசம்பர் 19-ம் தேதி வெள்ள நீர் புகுந்தது. அந்த உடைப்பானது வெள்ளாளன் விளை மற்றும் சில ஊர் மக்களின் சொந்த முயற்சியால் டிசம்பர் 23 ஆம் தேதி சீர் செய்யப்பட்டது. இருப்பினும் இந்த ஊர் முழுவதும் பள்ளமான பகுதியாக இருப்பதால் கிட்டத்தட்ட இருபது நாள்களாகியும் வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது.

நாங்கள் அங்குச் சென்ற வரைக்கும் கூட வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான எந்த முறையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மணல் மற்றும் கற்களை மட்டும் கொட்டி வைத்திருந்தனர்.

அருகிலுள்ள சீயோன்நகர் என்ற ஊரில் NLC நிறுவனத்தின் சார்பில் மோட்டார்களைப் பயன்படுத்தி நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தனர். அந்த பணிகள் கிட்டத்தட்ட 12 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றனவாம். “இரண்டாயிரம் ஏக்கர் குளத்து தண்ணிய இந்த மோட்டாரை வச்சு என்னைக்கு உறிஞ்சு முடிப்பீங்க” என ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர் உள்ளூர் வாசிகள். வெள்ளாளன் விளையில் கிட்டத்தட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீருக்குள் மூழ்கியிருந்தன. அருகிலிருந்த பள்ளிக்கூட கட்டடத்தில் தான் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுடன் பேசத் தொடங்கியதும் தங்கள் ஆதங்கங்களைக் கொட்டத் தொடங்கி விட்டனர். முதலாவதாக வெள்ளத்தால் வீட்டை இழந்த சாமுவேல் என்பவரிடம் பேசினோம். “சடையநேரிக் கால்வாய் உடைந்து எங்கள் ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. மொத்தம் 60 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தால் இது வரை எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. மறியல் போராட்டம் அறிவித்தால் ‘Peace community ‘(அமைதிப் பேச்சுவார்த்தை) எனக் கூறி கட்டுப்படுத்தி விடுகிறார்கள்.

இதைச் செய்கிறோம் அதைச் செய்கிறோம் எனக் கூறி ஏமாற்றிவிடுகிறார்கள். என்னுடைய வீடும் மூழ்கியிருக்கிறது. ஆறு மாதம் ஆனாலும் என்‌ வீட்டிற்குள் போக முடியாது. தண்ணீர் வற்றக் கூடிய சூழ்நிலையே இல்லை. முதல் கட்டமாக மணலை வைத்து தண்ணீரை வெளியேற்றுவோம் எனக் கூறினார்கள். இன்னும் ஒரு வேலையும் நடைபெறவில்லை. சீரமைப்புப் பணிகளுக்காகப் பஞ்சாயத்திலிருந்து நிதி கேட்டுக் கோரிக்கை வைத்தும் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் யாருமே இதுவரை வரவில்லை. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி வரும்போது மக்கள் ஆவேசத்துடன் பேசினார்கள்.

நாங்கள் சாப்பிடும் சாப்பாடு ஊர் கமிட்டி மூலம் வழங்கப்படுகிறது. எங்கள் பஞ்சாயத்துத் தலைவர் தனியே முயன்று சோறு போடுகிறார். சமையல் ஆள்களுக்கு ஒரு நாளைக்கு 2,100 ரூபாய் கொடுக்கிறோம். இத்தனை வீடுகள் மூழ்கிக் கிடக்கின்றன. எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழியில்லை.

அமைச்சர் பொருள் கொடுப்பதாகக் கூறுகிறார்கள். யார் கொடுக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. இந்த குளிரில் உங்களுக்கு மூடுவதற்கு போர்வை இருக்கிறதா? உடுப்பதற்குத் துணி இருக்கிறதா என்று கூட கேட்க ஆள் இல்லை. அரிசி தந்தால் மட்டும் போதுமா? நாங்கள் எங்கே போய் சமைத்துச் சாப்பிடுவோம். வீடு தண்ணீருக்குள் இருக்கிறது. தண்ணீரிலிருந்து நாற்றம் வர ஆரம்பித்துவிட்டது. கொசுக்கடியால் தூங்கக் கூட முடியவில்லை. கேட்பதற்கு ஒரு நாதியில்லை! ” என அவர்களின் கஷ்டங்களை எல்லாம் கொட்டித் தீர்த்தார்.

அடுத்ததாக பெல்சிட் என்ற பெண் ஒருவரிடம் பேசினோம். “நான் இந்த ஊருக்கு வந்து பதினான்கு வருஷம் ஆகுது. இப்படி ஒரு வெள்ளத்த பாத்ததில்ல. யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. எங்க ஊருக்கு நியூஸ் காரங்க ஒருத்தர் கூட வரல. ஏன்‌ வரல? எதுக்கு வரல? எதுவுமே தெரியல.

பெல்சிட்

திமுக கவுன்சிலர் இங்க தான் இருக்காங்க. அவங்க இதுவரைக்கும் எட்டிக் கூட பாக்கல. அஞ்சு கிலோ அரிசிக்கு எல்லாம் நாங்க ஆச படல. காசு இருந்தா எங்கயும் வாங்கிக்குவோம். எவ்ளோ வீடு தண்ணிக்குள்ள மூழ்கியிருக்குன்னு பாருங்க. வெள்ளாளன்விளை ஊர் எங்க இருக்குதுன்னு தெரியலையா? தெரியலன்னா தெரிஞ்சிகிடுங்க. ஒரு கிராமமே தண்ணிக்குள்ள இருக்கு. எதாவது அமைச்சர் வந்தா மட்டும் தான் நியூஸ் காரங்க வர்றாங்க. எங்க ஊர் பிரச்னைய தீர்க்க யாரும் வரமாட்டீங்களா?” என சர மாரியாக கேள்வி எழுப்பினார்.

வெள்ளாளன்விளை பஞ்சாயத்து தலைவர் ராஜரத்தினத்திடம் பேசினோம். “மணல் மூட்டைய அடுக்கி தண்ணீர தடுக்கலாமான்னு பாக்குறோம். ஆனா எதுவும் முடியல. நேத்துதான் மணல்மூட்டை வேலை ஆரம்பிச்சுது. கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கர்ல தண்ணீர் தேங்கியிருக்குது. அரசாங்கத்துக் கிட்டயும் எந்த ஐடியாவும் இல்ல. அமைச்சர்ட்டயும் சொன்னோம். அவர் தண்ணிய எடுத்துட்டு இருக்காங்கன்னு சொன்னாரு. எந்த முயற்சியுமே வெற்றி அடையல. பாப்போம்!” என்று கூறினார்.

தண்ணீர் தேங்கி இருபது நாட்களாகியும் எந்த ஒரு போர்க்கால நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியத்துடன் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, வெள்ளத்திலிருந்து தம்மை மீட்க வேண்டும் என்பதே வெள்ளாளன்விளை மக்களின் கோரிக்கை!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.