கோல்கட்டாபிரபல இசைக்கலைஞரான உஸ்தாத் ரஷீத் கான், 55, புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
இந்திய கிளாசிக்கல் மற்றும் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் புகழ்பெற்ற இசைக்கலைஞராக திகழ்ந்தவர் உஸ்தாத் ரஷீத் கான். இவர், புகழ்பெற்ற பாடகர் இனாயத் ஹுசைன் கானின் பேரன்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இது தவிர, பாலிவுட் திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
சமீபத்தில், புராஸ்டேட் சுரப்பியில் உருவான புற்றுநோய் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 3:45 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அவரது உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்.
”அவரது உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும்,” என, அறிவித்தார்.
ரஷீத் கானின் மறைவுக்கு இசைக்கலைஞர்கள், பாலிவுட் திரையுலகினர், அரசியல் கட்சியினர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement