சித்ரதுர்கா,
கோவா ஹோட்டல் அறையில், நான்கு வயது மகனை கொன்று உடலை சூட்கேசில் திணித்து, காரில் எடுத்து வந்த ஐ.டி., நிறுவன பெண் சி.இ. ஓ.,வை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்த பெண் சுச்சனா சேட், 39, கல்விக்காக 2008ல் பெங்களூரு வந்தார்.
தம்பதிக்குள் விரிசல்
இங்கு பிஎச்.டி., முடித்தார். இங்குள்ள, ‘மைண்ட்புல் ஏ.ஐ., லேப்’ என்ற நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இவருக்கு, தமிழகத்தை சேர்ந்த வெங்கட்ரமணா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இது காதலாக மாறி, 2010ல் திருமணம் செய்து கொண்டனர். 2019ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின், தம்பதிக்குள் விரிசல் ஏற்பட்டது.
இவர்களது விவாகரத்து வழக்கு, விசாரணையில் உள்ளது. வாரந்தோறும் ஞாயிறு அன்று, மகனை சந்தித்து பேச, வெங்கட்ரமணாவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இது, சுச்சனாவுக்கு பிடிக்கவில்லை.
தற்போது, வெங்கட்ரமணா, இந்தோனேஷியாவில் பணியாற்றுகிறார். மகன் சின்மய் ரமணன், 4, உடன், சுச்சனா பெங்களூரில் வசிக்கிறார்.
ஜனவரி 6ல், மகனுடன் கோவாவுக்கு சுற்றுலா சென்ற இவர், ‘சோல் பானியன் கிராண்ட்’ என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
சுச்சனா, நேற்று முன்தினம் காலை, ஹோட்டல் அறையை காலி செய்வதாக கூறினார். ‘பெங்களூருக்கு திரும்ப வாடகை கார் வேண்டும்’ என்றார்.
ஹோட்டல் ஊழியர்களே வாடகை கார் ஏற்பாடு செய்தனர். தன் லக்கேஜ்கள், சூட்கேசுடன் தனியாக புறப்பட்டார். ‘மகன் எங்கே?’ என, ஊழியர்கள் கேட்டபோது, உறவினர் அழைத்துச் சென்றதாக பதிலளித்தார்.
பின், சுச்சனா தங்கியிருந்த அறையை, ஊழியர்கள் சுத்தம் செய்தபோது, தரையில் பல இடங்களில் ரத்தம் சிதறி இருப்பதை கண்டு அதிர்ந்தனர். அவர்கள் தகவலின்படி, கோவா போலீசார் விரைந்து வந்தனர்.
பிரேத பரிசோதனை
வாடகை காரை ஹோட்டல் ஊழியர்களே ஏற்பாடு செய்திருந்ததால், கார் பதிவு எண்ணும், ஓட்டுனரின் மொபைல் போன் எண்ணும் இருந்தது.
கார் ஓட்டுனரை தொடர்பு கொண்ட போலீசார், பெண்ணுக்கு சந்தேகம் ஏற்படாமல், கொங்கணி மொழியில் நடந்த சம்பவத்தை விவரித்தனர். அந்த பெண்ணை, அருகில் உள்ள போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கூறினர்.
அப்போது கார், கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவை கடந்து, ஹிரியூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அருகில், அய்மங்களா போலீஸ் நிலையம் இருப்பதை கவனித்த ஓட்டுனர், நேராக போலீஸ் நிலையத்தில் காரை நிறுத்தி, போலீசாரிடம் விஷயத்தை கூறினார்.
போலீசாரும் சுச்சனாவின் சூட்கேசை திறந்து பார்த்தபோது, மகன் உடல் இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து, கோவா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விசாரணையில், சுச்சனா, தன் மகனை கழுத்தை நெரித்து கொலை செய்து, தானும் கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துஉள்ளார்.
ஆனால், தற்கொலை செய்து கொள்ள பயமாக இருந்ததால், எண்ணத்தை கைவிட்டு மகனின் உடலை, சூட்கேசில் மறைத்து பெங்களூருக்கு கொண்டு செல்ல முடிவு செய்ததை, ஒப்புக்கொண்டார்.
நள்ளிரவு சித்ரதுர்காவுக்கு வந்த கோவா போலீசார், சுச்சனாவை அழைத்துச் சென்றனர். சிறுவனின் உடல், ஹிரியூர் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சுச்சனாவை ஆறு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்