வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இருவருக்கும் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்தது உச்சநீதிமன்றம்.
தமிழக உயர்கல்வி துறை அமைச்சராக பதவி வகித்து வந்த பொன்முடி, 2006 – 11 காலகட்டத்தில், தி.மு.க., ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக, 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக, 2011-ல் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள், அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும், 2016-ல் விடுதலை செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை, 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், தலா, 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தும், இவர்கள் ஒரு மாத காலத்திற்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
விலக்கு
இந்த உத்தரவை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று (ஜன.,12) நடைபெற்ற விசாரணையில் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், ‘பொன்முடிக்கு 73 வயதாகிறது. பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு மருந்துகள் எடுத்து வருகிறார். எனவே வயது முதிர்வு மற்றும் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சதிஷ் சந்திர வர்மா, பொன்முடி மற்றும் விசாலாட்சி இருவரும் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement