கோவாவில் கடந்த வாரம் பெங்களூரைச் சேர்ந்த பெண் சி.இ.ஒ சுசனா சேத், தன்னுடைய 4 வயது மகனைக் கொலைசெய்து, உடலை டாக்ஸியில் எடுத்துச் செல்லும்போது வழியில் பிடிபட்டார். அவரைப் பிடிக்க டாக்ஸி டிரைவர் மற்றும் அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீஸாருக்கு உதவினர். சுசனா சேத்தை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே தன்னுடைய கணவர் ஒவ்வொரு வாரமும் மகனைப் பார்க்க கோர்ட் அனுமதித்திருந்ததால், சுசனா கடும் அதிருப்தியில் இருந்தார். சுசனா சேத்தும் அவரின் கணவரும் கடந்த சில ஆண்டுகளாகப் பிரிந்து இருக்கின்றனர். குழந்தை சுசனாவிடம் இருந்தாலும், எதிர்காலத்தில் கோர்ட் குழந்தையை அதன் தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிடலாம் என்ற அச்சம் சுசனாவிடம் இருந்ததாகத் தெரிகிறது.

கோவாவில் சுசனாவும் அவரின் மகனும் தங்கி இருந்த அறையிலிருந்து சுசனா கைப்பட எழுதிய டிஸ்யூ பேப்பர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஐந்து வரிகள் எழுதி பேப்பரை கசக்கி போட முயன்றுள்ளார். தடயவியல் சோதனையின்போது அது சிக்கியிருக்கிறது. மகனைக் கொலைசெய்யும்போது அவரது மனநிலை எப்படி இருந்தது என்பதை, அவர் எழுதிய வரிகள் பிரதிபலிப்பதாக இருந்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.
சுசனாவின் கையெழுத்து மாதிரியுடன் சேர்த்து அவர் எழுதிய கடிதத்தை சோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். அந்தக் கடிதத்தில், `என்னுடைய மகன், கணவரைப் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்று குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை முழுமையாகச் சொல்வது சரியாக இருக்காது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் கோவாவில் தங்கியிருந்த அறையில் இரண்டு காலி இருமல் மருந்து பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகனுக்கு அதிகப்படியான மருந்தை கொடுத்து கொலைசெய்ய அவற்றை வாங்கினாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர் திட்டமிட்டு இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்று இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தன்னுடைய தோழிகள் மற்றும் நண்பர்களிடம், தன்னுடைய மகன், தன் கணவரைப் போன்று இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். கொலைக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் சுசனா தன்னுடைய மகன்மீது அதிக அன்பு வைத்திருந்ததாக, அவர் வசித்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் தெரிவித்தனர்.