Jio Airtel 5G Data Price Hike: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய டெலிகாம் ஆப்ரேட்டர்கள் இந்தியாவில் 5ஜி இணைய சேவைகளை கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தின. இந்த இரு நிறுவனங்கள் மட்டுமே தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி இணைய சேவையை நாடு முழுவதும் வழங்கி வருகிறது.
5ஜி திட்டங்களுக்கு அதிக கட்டணம்?
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை இணைந்து மொத்தம் 125 மில்லியனுக்கும் அதிகமான 5ஜி சந்தாதாரர்களை சேர்த்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் தொலைத்தொடர்பு ஜாம்பவான்களாக கருதப்படும் இந்த இரண்டு நிறுவனங்கள் தற்போது வரை 4ஜி இணைய சேவைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கின்றனர், வரம்பற்ற 5ஜி சேவைக்கு என தனிக்கட்டணம் எதையும் வசூலிக்கவில்லை.
இருப்பினும், இந்த நிறுவனங்கள் தங்கள் வரம்பற்ற 5ஜி சலுகைகளை விரைவில் நிறுத்தக்கூடும் என்றும், தற்போதைய 4ஜி திட்டங்களுக்கு மேல் 5ஜி திட்டங்களுக்கான கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கூடுதல் கட்டணம்?
ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்களது வரம்பற்ற 5ஜி டேட்டா திட்டங்களை நிறுத்திவிட்டு, 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அதன் வருவாய் வளர்ச்சியை கருத்தில்கொண்டு 4ஜி இணைய சேவையை விட 5ஜி இணைய சேவைக்கு 5-10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பின்னர், ஏறக்குறைய ஒரு வருடத்திற்கும் மேலாக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை வரம்பற்ற டேட்டா திட்டங்களுடன் 4ஜி கட்டணத்தில் 5ஜி இணைப்பை வழங்கி வருகின்றன. இதனால், அடுத்த தலைமுறை வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைக்கு மேம்படுத்த ஏற்கனவே உள்ள சந்தாதாரர்களை கவர்ந்திழுத்து வருகின்றன.
அதிகரிக்கும் பயனர்கள்
இருப்பினும், ஜியோ மற்றும் ஏர்டெல் நாடு முழுவதும் 5ஜி சேவைகளை வெளியிடுவதற்கும், தத்தெடுப்பு விகிதங்கள் அதிகரிக்கும் போது பணமாக்குதலில் கவனம் செலுத்துவதற்கும் இந்த வியூகம் விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 5ஜி பயனர்களின் எண்ணிக்கை 200 மில்லியனைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் மற்றும் ஜியோவின் முன்மொழியப்பட்ட 5ஜி திட்டங்கள், 4ஜி திட்டங்களை விட 5-10 சதவிகிதம் விலை உயர்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நெட்வொர்க் வழங்குநர்கள் இந்த பேக்கேஜ்களில் 30-40 சதவிகிதம் கூடுதல் டேட்டாவைச் சேர்த்து வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களின் சந்தைப் பங்கையும் அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக மற்றொரு தொலைத்தொடர்பு ஆபரேட்டரான வோடபோன் ஐடியா (Vi) இன்னும் 5ஜி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை.
இதற்கிடையில், 2023ஆம் ஆண்டில் UPI மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 100 பில்லியனைத் தாண்டியது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 60 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது. 2022ஆம் ஆண்டில் மொத்த UPI பரிவர்த்தனைகள் சுமார் 74 பில்லியன் ஆகும்.