ஏதோ ஒரு கதையோ, கவிதையோ, கட்டுரையோ தானே மிகப்பெரிய இலக்கிய ஆளுமைகளை, இலக்கிய உலகிற்குள் கூட்டி வந்த வாசலாக அமைந்திருக்கும்? அந்த வகையில், வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள் எந்த மாதிரியான புத்தகங்களைத் தேடிப் படிப்பார்கள்? எந்த புத்தகங்கள் அவர்களை இலக்கியத்திற்குள் கூட்டி வந்திருக்கும்?

‘மழைக்கண்’ என்ற சிறுகதைத் தொகுப்பு சென்ற வருடம் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றது. இந்நூலின் ஆசிரியர் செந்தில் ஜெகன்நாதன், தான் இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாங்கப்போகும் நூல்களைப் பற்றியும், தன்னை இலக்கிய உலகிற்குள் இழுத்த நூலைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

இலக்கியத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டிய புத்தகங்கள்!
1. ராஜா வந்திருக்கிறார் – சிறுகதைத் தொகுப்பு.
ராஜா வந்திருக்கிறார் என்ற சிறுகதையை படித்துவிட்டு தான், பல எழுத்தாளர்களை தேடிப் படிக்க ஆரம்பித்தேன். கு. அழகிரிசாமியின் எழுத்துகள் மிக எளிமையான மொழியில், மிக நுட்பமான மனச் சித்தரிப்புகளைக் கொடுக்கக்கூடியது. அவரின் எழுத்துகள், பல்வேறு தளங்களில் குழந்தைகளின் உலகத்தையும், பெண்களின் அக உலகத்தையும் சொல்லக் கூடியதாக இருக்கிறது.

இந்தப் புத்தகக் காட்சியில் வாங்க நினைக்கும் நூல்கள்:
1. சிற்பச் செந்நூல்
தமிழகத்தின் முக்கியமான சிற்பிகளில் ஒருவரான கணபதி ஸ்தபதி எழுதிய இந்த புத்தகம் ஒரு அரிய புத்தகம். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் வெளிவருகிறது. இது சிற்பக்கலை மற்றும் சிற்பம் செய்வது குறித்து விளக்குகிறது.
2. கௌதம புத்தரின் அடிச்சுவடு
இது கோ.சிவபாத சுந்தரம் எழுதி, வானதி பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது. இந்நூல் புத்தர் குறித்தும், புத்தத் தத்துவம் குறித்தும் உரையாடுகிறது.
3.மழைக்காலமும் குயிலோசையும்
இயற்கை சார்ந்தும், சூழலியல் சார்ந்தும் எழுதக் கூடிய மிக முக்கியமான எழுத்தாளரான மா. கிருஷ்ணன் அவர்களின் நூல் இது.
4. பீட்டர்ஸ்பர்க்கின் நாயகன்
சா. தேவதாஸ் மொழிப் பெயர்த்து, நூல்வனம் பதிப்பகத்தில் வெளிவந்துள்ள இந்த நூல், தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்கையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நாவல்.

5. இராமன் வனவாசம் போனவழி – ஒரு தேடல்
சீர்ஷேந்து முகோபாத்யாய் என்ற வங்க எழுத்தாளர் எழுதிய நூல் இது. காலச்சுவட்டில் வெளிவந்துள்ளது. இந்த ஐந்து நூல்கள் தான் நான் முக்கியமாக வாங்க நினைக்கும் நூல்கள்.
பரிந்துரை:
கதாவிலாசம்- எஸ்.ராமகிருஷ்ணன்; நவீன தமிழிலக்கிய அறிமுகம் -ஜெயமோகன்.
இரண்டு நூல்களும் தமிழின் முக்கிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துபவை. இவை இரண்டும் ஆரம்ப நிலை வாசகர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்.