குமுளி: சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம்தேதி நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை வழிபாடு டிச.27-ம்தேதி நடைபெற்றது. அன்றுஇரவு நடைசாத்தப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக டிச. 30-ம் தேதி மீண்டும் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தை மாதம் முதல் தேதியான இன்று நடைபெறும் (ஜன. 15) மகரஜோதியையொட்டி, ஜோதி வடிவில் ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மகரஜோதியைக் காண கேரளா மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர். இன்று அதிகாலை 2.46 மணிக்கு மகரசங்ரம பூஜையுடன் தொடங்கி, நெய் அபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
பகல் 12.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு பூஜையைத் தொடர்ந்து, பகல் 1 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, மாலையில் ஐயப்ப சுவாமி பந்தள மன்னர் வழங்கிய திருவாபரண அலங்காரத்தில் காட்சியளிப்பார். மாலை 6.30 மணியளவில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்ப சுவாமி ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
மகரஜோதியைக் காண பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தின் திருமுற்றம், பாண்டித்தாவளம், கொப்பரைக்களம், மாளிகைபுரம், அப்பாச்சிமேடு, அன்னதான மண்டபம் உள்ளிட்ட 10 இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மகரஜோதியை தரிசிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். 21-ம் தேதி பந்தள ராஜ குடும்பத்தினரின் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு மண்டல பூஜை வழிபாடு முடிந்து, கோயில் நடை சாத்தப்படும்.