Lets prevent technical fraud in elections! Guaranteed by Open A.I. Company | தேர்தல்களில் தொழில்நுட்ப மோசடியை தடுப்போம்: ஓபன் ஏ.ஐ. நிறுவனம் உறுதி

புதுடில்லி : இந்தியா உட்பட, உலகெங்கும், 50 நாடுகளில் இந்தாண்டு பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ‘இந்தத் தேர்தல்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தான் உருவாக்கியுள்ள செயலிகள் உள்ளிட்டவை, பிரசாரம் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுப்போம்’ என, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஓபன் ஏ.ஐ.,’ என்ற முன்னணி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

தற்போது தகவல் தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் இதில் சில சிக்கல்களும், அபாயங்களும் உள்ளன.

ஒருவரின் உருவத்தை மற்றொருவரின் உருவத்துடன் பொருத்துதல்; ஒருவர் பேசியதை, வேறொருவர் பேசியதாக காட்டுவது; ஒருவர் பேசாததை அவர் பேசியதுபோல் காட்டுவது என, இந்த தொழில்நுட்பத்தில் பல சிக்கல்கள் உள்ளன.

சர்ச்சை

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும், ‘டீப் பேக்’ எனப்படும் போலி வீடியோக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இதுபோலவே, செயற்கை நுண்ணறிவின் அடிப்படையிலான பல செயலிகள், தளங்களும் சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றன.

இந்த நிலையில், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், தைவான், பாகிஸ்தான் என, உலகின், 50 நாடுகளில், இந்தாண்டு பொதுத் தேர்தல்கள் நடக்கின்றன. உலக மக்கள் தொகையில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதில் ஓட்டளிக்க உள்ளனர்.

இதையடுத்து, ‘சாட் ஜி.பி.டி., – டல்லே’ உள்ளிட்ட செயலிகள், தளங்களை உருவாக்கியுள்ள, அமெரிக்காவைச் சேர்ந்த, ஓபன் ஏ.ஐ., நிறுவனம் புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. சாம் ஆல்ட்மேன் தலைமை செயல் அதிகாரியாக உள்ள இந்த நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொடர்பான பல ஆராய்ச்சிகளிலும், புதிய தளங்களை உருவாக்குவதிலும் முன்னணியில் உள்ளது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகெங்கும் உள்ள மிகப் பெரும் ஜனநாயக நாடுகள் உட்பட பல நாடுகளில் இந்தாண்டு தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்த நிலையில், எங்களுடைய தளங்கள் மற்றும் செயலிகள், இந்த ஜனநாயக நடைமுறைக்கு குந்தகம் ஏற்படுத்தாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ள சாட் ஜி.பி.டி., டல்லே உள்ளிட்டவை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க பல கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, இவற்றை பயன்படுத்தி, பொய் செய்திகள் வெளியிடுவது, பொய் வீடியோக்கள் வெளியிடுவது தடுக்கப்படும்.

மேலும், வேட்பாளர்களை ஆள்மாறாட்டம் செய்யும் மோசடியை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தேர்தல் பிரசாரங்கள் அல்லது தேர்தல் நடைமுறைகளில் குழப்பத்தை ஏற்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தளங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கவும், பயனாளிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

மேலும், ஒரு குறிப்பிட்ட வீடியோ அல்லது பதிவுகள், எந்தத் தளத்தில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை, மக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் அளிக்க உள்ளோம்.

இதன் வாயிலாக, எங்களுடைய தளத்தின் மீதான நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும். மேலும், போலி செய்திகள், போலி வீடியோக்கள் உள்ளிட்டவை தடுக்கப்படும். மிகவும் பாதுகாப்பான தளங்களாக எங்களுடைய தளங்களை மாற்றுவோம்.

ஆலோசனை

உலகெங்கும் உள்ள எந்த நாட்டிலும், தேர்தல் நடைமுறைகளை சீர்குலைக்காத வகையில், நேர்மையான முறையில் தேர்தல் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்ததாக எந்த ஒரு புதிய முயற்சியை, தளத்தை வெளியிட்டாலும், அதற்கு முன் அது தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள் பெறுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படும்.
எவ்வித பாரபட்சமும் இல்லாமல், உண்மையை உண்மையாக காட்டவும் முயற்சிகள் எடுக்கப்படும்.இந்தப் பணிகள் ஏற்கனவே துவங்கியுள்ளன. இவை தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வருகிறது கடுமையான விதிகள்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் பிரச்னை, குறிப்பாக, ‘டீப் பேக்’ ஏற்படுத்தி வரும் பிரச்னை குறித்து, மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நேற்று கூறியுள்ளதாவது:செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும், ‘டீப் பேக்’ எனப்படும், போலி வீடியோ மற்றும் புகைப்படங்கள் பல குழப்பங்களையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன. ஒருவரின் முகத்தை மற்றொருவரின் உடலுடன் பொருத்தி வெளியிடப்படும் வீடியோக்கள், சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. பல பிரபலங்களின் முகங்கள், தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன.இந்த விவகாரம் தொடர்பாக, சமூக வலைதள நிறுவனங்களுடன் விவாதித்தோம். அதன்படி, நம் நாட்டில் நடைமுறையில் உள்ள தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.ஆனால், இதில் முழுமையாக ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து மிகவும் கடுமையான சட்ட விதிகளை, அடுத்த, 7 – 8 நாட்களில் அறிவிக்க திட்டமிட்டுள்ளோம். அந்த விதிகளை மீறினால், கடும் நடவடிக்கைகளை சமூக வலைதளங்கள் சந்திக்க நேரிடும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.