தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் செல்வ சதீஷ் என்ற சூபி. இவர் தனது நண்பரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 09.05.2022 முதல் சிறையில் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் குற்றவாளிகள் பட்டியலில் இவரது பெயர் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். நண்பரை கொலை செய்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த 9-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் இருந்த செல்வசதீஷ் என்ற சூபியை ஆயுதப்படையை சேர்ந்த 2 ஆண் காவலர்கள், ஒரு பெண் காவலர், 2 பயிற்சி காவலர்கள் ஆகிய 5 பேர் தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். காலை 11.30 மணிக்கு நீதிமன்றத்திற்க்கு வந்தனர். அப்போது செல்வ சதீஷ் திடீரென கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு செல்ல போலீஸார் அனுமதித்துள்ளனர்.
நீண்ட நேரமாகியும் அவர் கழிப்பறையை விட்டு வெளியேற வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த போலீஸார், கழிவறை ஜன்னல் வழியே பார்த்தனர். அப்போது கழிப்பறை ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது. கழிப்பறைக்குள் செல்வ சதீஷ் இல்லை. பின்புதான் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அவர் தப்பியோடியது தெரிய வந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக ஆயுதப்படை காவலர் ஒருவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், தப்பி ஓடிய கைதியை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். விசாரணையில், செல்வ சதீஷ் ஏற்கனவே திட்டமிட்டு, அந்த கழிப்பறை வழியாக தப்பி சென்றதும், ஏற்கனவே தயார் நிலையில் இருந்த தனது மனைவியுடன் வெளியூருக்கு தப்பி சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து செல்வ சதீஷின் செல்போன் சிக்னல் மற்றும் அவரது உறவினர்களின் செல்போன் அழைப்புகளை கண்காணித்து வந்தனர். அப்போது, செல்வ சதீஷ் இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு நெருங்கியவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இதனால் அவரது இருப்பிடம் தெரியாமல் போலீஸார் திணறி வந்தனர். இந்த நிலையில் செல்வ சதீஷ், தனது மனைவியின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு, தான் புதிதாக வாங்கிய ஒரு செல்போனில் இருந்து தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனை அறிந்த போலீஸார், அந்த எண்ணை கண்காணித்தனர்.

அப்போது, அந்த எண் கோவையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீஸார் கோவைக்கு விரைந்தனர். அப்போது, கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்லும் ஒரு பேருந்தில் தனது மனைவியுடன் இருந்த செல்வ சதீஷ் தனிப்படை போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் ஊட்டிக்கு சுற்றுலா செல்வதற்காக பேருந்தில் பயணித்தது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்து தூத்துக்குடிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY