‘பத்து தல’ படத்திற்கு பின் நடிகர் சிலம்பரசன், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமிட் ஆனார். சிம்புவின் 48 படமாக உருவாகும் இப்படம், டிராப் ஆகிறது என வதந்திகள் பரவிய நிலையில், இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி..

கமலின் ராஜ்கமல் நிறுவனம் இப்போது சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்துள்ளது. அதைப் போல, சிம்பு, தேசிங்கு பெரியசாமி காம்பினேஷனிலும் ஒரு படத்தை அறிவித்தது. பட அறிவிப்பு வெளியாகி பல வாரங்கள் ஆனதால், இப்படம் மேற்கொண்டு வளராது என தகவல்கள் பரவின. இயக்குநர் தேசிங்கு பெரியசாமி கூட, இது தாமதம் அல்ல. ப்ரீ புரொடக்ஷனுகான கால அவகாசம்தான் என நம்மிடம் சொல்லியிருந்தார்.
Blood and Battle ஆக அறிவிக்கப்பட்டிருக்கும் சிம்புவின் இந்தப் படம், ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் படமாகும். முழுக்க முழுக்க இன்டோரில் தான் அரங்கங்கள் அமைக்கபட்டு படப்பிடிப்பு நடக்க உள்ளது. ஸ்டோரி போர்டு உருவாக்கப்பட்டு, வி.எஃப்.எக்ஸ் குழு அறிவுறுத்தலின் படி ஒவ்வொரு காட்சிக்கான குறிப்புகளைக் கொண்டு செட் வேலைகள் ஆரம்பமாக இருக்கின்றன. ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ படங்கள் படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்னர் ஒரு ப்ரீ புரொடக்ஷனுக்கான கால அவகாசம் எடுத்துக்கொண்டு சென்றது போல, இந்த கால அவகாசம் ஆகிறது என்றும், இந்த படத்திற்காக ராஜ் கமல் அலுவலகத்தில் கிராபிக்ஸ் வல்லுநர்கள் 30 பேர் கொண்ட குழுவினர் வேலை செய்து வருகின்றனர். படத்தின் ஆக்ஷன் உங்களை மிரள வைக்கும் என்கிறார்கள்.

சூர்யாவின் ‘கங்குவா’வில் பீரியட் காட்சிகளை அரங்கம் அமைத்து எடுத்தது போல, சிம்புவின் படமும் அரங்கம் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடக்கிறது. இப்போது துபாயில் இருக்கும் சிம்பு, இக்கதைக்கேற்ற உடல்வாகுடன் தயாராகிவிட்டார் என்றும் இம்மாத கடைசியில் சென்னை வருகிறார் என்றும் சொல்கிறார்கள். அனேகமாக வரும் பிப்ரவரியில் படப்பிடிப்புக்கு கிளம்புகின்றனர் . இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டே, அடுத்த படத்தில் கமிட் ஆகும் திட்டத்தில் இருக்கிறார் சிம்பு.
முன்னதாக கமல் – மணிரத்னம் கூட்டணியின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு சென்னையில் கல்லூரி ஒன்றில், இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்றும் தெரிகிறது.