டி20 சதத்தில் ரோகித் நம்பர் ஒன்.. மருத்துவமனையில் இருந்து வாழ்த்திய சூர்யகுமார்

பெங்களூருவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் அவர் இதுவரை 5 சதங்கள் விளாசி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ், மக்ஸ்வெல் 4 சதங்கள் அடித்துள்ளனர். அதேபோன்று இந்த போட்டியில் 46 ஓட்டங்கள் எடுத்த போது ரோகித் சர்மா மேலும் ஒரு சாதனையை படைத்திருக்கிறார்.  20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தலைவராக அதிக ரன்கள் குவித்த விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை ரோகித் சர்மா(1572 ஓட்டங்கள்) பிடித்துள்ளார். விராட் கோலி அணித் தலைவராக 1570 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இப்போட்டியில் சதம் அடிக்கும் முன் ரோகித் மற்றும் சூர்யகுமார் ஆகியோர் தலா 4 சர்வதேச 20 ஓவர் போட்டி சதங்களை விளாசியிருந்தனர். ரோஹித் சர்மா இந்த சாதனையை முறியடித்த போது, அவரது நெருங்கிய நண்பரும், இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஜெர்மனியில் இடுப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தார்.  சூர்யகுமார் யாதவ் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கும் நிலையில், ரோஹித் சர்மா இந்த சாதனை முறியடிப்பை நிகழ்த்தியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் இருந்தவாறே கிரிக்கெட் போட்டியை பார்த்த சூர்யகுமார், ரோகித் சர்மாவுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதேபோல், ரோகித்தும், சூர்யகுமார் மீண்டும் களத்துக்கு திரும்புவதை எதிர்பார்த்திருப்பதாக கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்தது. முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 212 ரன்கள் குவிக்க, அடுத்த ஆடிய ஆப்கானிஸ்தான் அணியும் 212 ரன்கள் குவித்து போடியை டை செய்தது. அடுத்து நடைபெற்ற முதலாவது சூப்பர் ஓவர் போட்டியும் டை ஆன நிலையில், இரண்டாவது சூப்பர் ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

இந்த தொடரில் முதல் 2 போட்டிகளிலும் ரோகித் சர்மா டக் ஆவுட்டாகியிருந்தார். இதனால் அவர் இந்தப் போட்டியில் கட்டாயம் விளையாட வேண்டிய நெருக்கடியில் களமிறங்கினார். ஒருவேளை இந்த போட்டியிலும் ரோகித் ரன் எடுக்காமல் அவுட்டாகியிருந்தால் அவரின் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அடுத்து நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியிலும் இடம் கிடைக்காமல் கூட போய் இருக்கும். ஆனால், இதனையெல்லாம் உணர்ந்த அவர் சிறப்பாக விளையாடி சதமடித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.