மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் சிறப்பு நினைவேந்தல் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என்றும் பொதுச்சொத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தன்னுடைய இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்ட ஒரே தலைவர் அவர்தான் என்றும் மன திறந்து பேசியுள்ளார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.

இதுகுறித்து பேசியவர், “சாதாரண திரைப்படக் கல்லூரில இருந்த என்னை ஆர்.கே.செல்வமணினு இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த்தான். சமூகத்திற்குப் பயன் பெறாமல் இருப்பவன் மனிதனே இல்லை. நெய்வேலி போராட்டத்திற்கு நடிகர் சங்க நிர்வாகிகளைக் கூட்டிட்டு போனாரு. இந்த நிகழ்வை எல்லோரும் பார்த்துப் பாராட்டினாங்க.
நடிகர் சங்கம் தலைநிமிர்ந்து நடப்பதற்கு விஜயகாந்த்தான் காரணம். ஆகவே, நடிகர் சங்க வளாகத்திற்கு அவரின் பெயரையே வைக்க வேண்டும். இதற்காக ஆலோசனை நடத்துவோம் என்று பதில் கூறினால் எனது பதவியைக் கூட நான் ராஜினாமா செய்வேன். இதே மேடையில் கூடி முடிவெடுக்க வேண்டும். பொதுக்குழு கூடி அவரின் பெயரைச் சூட்ட முடிவு செய்ய வேண்டும். நடிகர் சங்கம் தனது நன்றிக் கடனைத் திருப்பி செலுத்தும் வழி இதுதான்!

பொதுச் சொத்தை எடுத்துக் கொள்ளாத ஒரு தலைவன் அவர்! காந்திகூட பொது இடத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால், விஜயகாந்த் பொதுச் சொத்தை வேண்டாம் என மறுத்துவிட்டு தன்னுடைய சொந்த இடத்திலேயே அடக்கமாகியுள்ளார். மீண்டும் அழுத்தமாகக் கூறுகிறேன் நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் சாரின் பெயரைத்தான் வைக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.