நடிகரும், பா.ஜ.க பிரமுகருமான சுரேஷ்கோபியின் மகள் பாக்யா சுரேஷுக்கும் தொழிலதிபரான மோகன்-ஸ்ரீதேவி ஆகியோரின் மகன் ஸ்ரேயஸ் ஆகியோருக்கும் கேரள மாநிலம் குருவாயூர் கோயில் நடைப்பந்தல் முன்பு உள்ள மண்டபத்தில் நேற்று முன் தினம் திருமணம் நடந்தது.
இந்தத் திருமணம் பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் நடந்தது. இதுகுறித்து நடிகர் சுரேஷ்கோபி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “திவ்யமான குருவாயூர் கோயிலில் வைத்து பிரதமர் நரேந்திரமோடி-யின் கவுரவ முன்னிலையில் எனது பிரியப்பட்ட பிள்ளைகளின் திருமணம் நடந்தது. தயவுசெய்து பாக்யா-ஸ்ரேயஸ் ஆயோருக்காகப் பிராத்தியுங்கள்” எனக் கூறியிருந்தார். சுரேஷ் கோபியின் மகளின் திருமணத்தில் மலையாள சினிமா பிரபலங்கள் திரளாக கலந்துகொண்டனர். அதிலும் குறிப்பாக மெகா நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். இப்போது அந்த திருமணத்தில் நடந்த சில நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்- ஆக வலம்வருகின்றன.

சுரேஷ் கோபியின் மகளின் திருமணத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டதால் குருவாயூர் கோயில் மத்திய பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருந்தது. திருமணத்துக்குச் சென்ற நடிகர் மோகன்லாலை பாதுகாப்புப்படையினர் சோதனை செய்யவில்லை எனவும், நடிகர் மம்முட்டியை மெட்டல் டிடெக்டரில் சோதனை செய்ததாகவும் மீம்ஸ்கள் பரவின. நடிகர்கள் வரிசையாக நின்ற சமயத்தில் பிரதமர் மோடி அவர்களுக்கு வணக்கம் செலுத்தியபடி நடந்து சென்றார்.
அப்போது, மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் பிரதமருக்கு பதில் வணக்கம் செலுத்தியதாகவும், நடிகர் மம்முட்டி பதிலுக்கு வணக்கம் செலுத்தாமல் கைகளை கட்டியபடி கண்டுகொள்ளாமல் நின்றதாகவும் சமூக வலைவதளங்களில் பதிவு வைரலானது.

என்ன நடந்தது என விசாரித்தோம். “குருவாயூர் கோயிலுக்குச் சென்ற நடிகர் சுரேஷ்கோபி, அவரது மகள் பாக்யா சுரேஷ் என அனைவரும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகுதான் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு மற்றும் சோதனையில் எந்தப் பாகுபாடும் பார்க்கப்படவில்லை. அதுபோன்று நடிகர் மோகன்லாலுக்கு வணக்கம் செலுத்திவிட்டு, அட்சதை வழங்கும்போது மம்முட்டி கைகளைக் கட்டிக்கொண்டு நின்றது உண்மைதான்.

மோகன்லாலுக்கு பிரதமர் வணக்கம் செலுத்துவதை மற்றொரு கோணத்தில் படம்பிடித்தபோது மம்முட்டிக்கு வணக்கம் செலுத்துவது போன்றும், மம்முட்டி கைகளை கட்டிக்கொண்டு நிற்பதுபோன்றும் தோன்றும். அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி தவறான பிரசாரம் செய்கின்றனர்.
ஆனால், அடுத்ததாக மம்முட்டியிடம் அட்சதை வழங்கிய பிரதமர் நரேந்திரமோடி, அவரது கைகளை பிடித்தபடி சிறிதுநேரம் பேசினார். மணமக்களை வாழ்த்துவதற்காக பிரதமர் வழங்கிய அட்சதையையும் மம்முட்டி பெற்றுக்கொண்டார். ” என்றனர் விபரம் தெரிந்தவர்கள்.

மேலும் திருநங்கை சமூக செயற்பாட்டாளரான ஷீதல் ஸ்யாம் தனது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி வணக்கம் செலுத்தும்போது மம்முட்டி கைகளை கட்டிக்கொண்டு நிற்கும் போட்டோவை பகிர்ந்து, “வேறு ஆளைப்பாருங்கள்… மம்முக்கா…” என கிண்டலாகக் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த நடிகர் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ், “சில நபர்கள் இப்படித்தான், பாதி விபரங்களை விழுங்கிவிட்டு நெகட்டிவ் விஷயங்களை வாந்தி எடுப்பார்கள். இதுதான் அவர்களுக்கு வேலை” என கூறியிருந்தார். மேலும், நடிகர் மம்முட்டியுடன் பிரதமர் மோடி பேசும் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.