திரையுலகினர் ஒன்று கூடி மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிவருகின்றனர்.
இவ்விழாவில் பேசிய விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், நடிகருமான வாகை சந்திரசேகர், “அருமை நண்பர் விஜி அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் இது. தனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே அவருக்கு சினிமா கனவு வந்திருக்கிறது. அதன் பிறகு சென்னைக்கு வந்தார். அப்போதுதான் எங்களுடைய நட்பு தொடங்கியது. கவலைகளை, போராட்டங்களை நாங்கள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வோம். இயக்குநர் எஸ்.ஏ.சி பல வெற்றிகளைக் கொடுத்தார். அதன் பிறகு சறுக்கல்களைக் கொடுத்தாலும் மீண்டும் வெற்றிகளைக் கொடுத்தார். அப்போது கொடி கட்டி பறந்த ரஜினிக்கும் கமலுக்கு இடையில் இவர் நின்றார். அதேபோல அரசியலிலும் கலைஞர், ஜெயலலிதா கொடி கட்டி பறக்கும் சமயத்தில் அங்கு விஜி சென்றார்.

தஞ்சாவூருக்கு அருகில் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தோம். அப்போது விஜியின் கார் முன்னாடி இருந்தது. இரண்டு கார்களுக்கு அடுத்ததாக நான் இருந்தேன். அதைப் போல இடைவெளிவிட்டு பலர் இருந்தார்கள். அப்போது அங்குள்ள மாணவர்கள் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு எங்களைத் தாக்க நினைத்தார்கள். அப்போது விஜயகாந்த் உடனடியாக எங்களை ஒரே காரில் ஏற்றி வேகமாகக் கிளம்பச் சொன்னார். அன்று எங்களை அவர்தான் காப்பாற்றினார். பொதுவாழ்விலும், சினிமாவிலும், அரசியலிலும் விஜி ஜெயித்துவிட்டார்!” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.