Gifts to the Ayodhya Ram temple… are piling up! | அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசு பொருட்கள்… குவிகிறது!

புதுடில்லி : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. நாடு முழுதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இனிப்புகள், வாசனை திரவியங்கள், லட்டு, அரிசி, காய் கனிகள், ஆடை ஆபரணங்கள், வில் உட்பட ஏராளமான பரிசுப் பொருட்கள் ராமபிரானுக்கு குவிந்த வண்ணம் உள்ளன.

கடந்த 500 ஆண்டுகளாக நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கஉள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இதற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ராமர் – சீதைக்காக, பல்வேறு மாநிலங்களிலும் இருந்து பரிசுப் பொருட்கள் ஒவ்வொரு நாளும் அயோத்தியை வந்தடைந்த வண்ணம் உள்ளன. அவை, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

ராமர் கோவிலுக்காக, 108 அடி நீளமுள்ள பிரமாண்ட ஊதுபத்தி, 2,100 கிலோ எடையுடைய மணி, 1,100 கிலோ எடை உடைய பிரமாண்ட விளக்கு, தங்க காலணிகள், 10 அடி உயர பூட்டு மற்றும் சாவி, ஒரே நேரத்தில் எட்டு நாடுகளின் நேரத்தை காட்டும் கடிகாரம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் அயோத்தி வந்தடைந்தன.

சிறப்பு பரிசு

நேபாளத்தில் உள்ள சீதை பிறந்த இடமான ஜனக்புரியில் இருந்து, 3,000 பரிசுப் பொருட்கள் அயோத்தி வந்து சேர்ந்தன.

அதில், வெள்ளி காலணிகள், ஆடை – ஆபரணங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் அந்நாட்டில் உள்ள ராம் ஜானகி கோவிலில் இருந்து 30 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.

ராமாயணத்தில் இடம் பெற்றுள்ள இலங்கையின் அசோக வனத்தில் இருந்து சிறப்பு பரிசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் பூந்தோட்டத்தில் இருந்து, இரண்டு பெரிய வாகனங்களில் 10,000 போகன் வில்லா மலர்கள் அயோத்தி வந்தடைந்தன.

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வர் கோவிலில் தயாரிக்கப்பட்ட ஐந்து லட்சம் லட்டுகள் அடங்கிய ஐந்து லாரிகளை, அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் நேற்று அனுப்பி வைத்தார். அதோடு, ‘ராம் ராம்’ என 4.31 கோடி முறை எழுதப்பட்ட தாள்களையும் அனுப்பி வைத்தார்.

உ.பி.,யின் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமியில் இருந்து, 200 கிலோ லட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆந்திராவின் திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஒரு லட்சம் லட்டுகள் அனுப்பப்பட உள்ளன.

மஹாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர், 7,000 கிலோ அல்வா செய்து அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.

உ.பி.,யின் பிரோஸாபாதில் தயாரிக்கப்பட்ட 10,000 வளையல்கள் அயோத்தியை வந்தடைந்தன. இந்த வளையல்களில் ராமர், சீதை மற்றும் அனுமன் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த பரிசுப் பொருட்கள் பட்டியலில், ஆக்ராவின் பிரபல இனிப்பான 56 வகை பேடாக்கள், கற்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள், வெள்ளி தட்டுகள், உ.பி.,யின் கனோஜ் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட சிறப்பு வாசனை திரவியங்கள் இடம் பெற்றுள்ளன.

பாரம்பரிய பரிசுப் பொருட்கள் பட்டியலில், குஜராத்தில் இருந்து, 500 கிலோ எடை உடைய மேளம், கேரளாவின் பத்ம நாப சுவாமி கோவிலில் இருந்து வில், அயோத்தியாவின் அமாவா ராமர் கோவிலில் இருந்து 2.50 கிலோ எடை உடைய வில் ஆகியவை வந்து சேர்ந்தன.

வெண்கல கொடி

சத்தீஸ்கரில் இருந்து இரண்டு லாரி நிறைய காய்கறிகள், 300 டன் அரிசி வந்துள்ளன. புதுடில்லியில் உள்ள ராமர் கோவிலில் இருந்து அரிசி, கோதுமை உட்பட பல்வேறு தானியங்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், 44 அடி உயர வெண்கல கொடி கம்பத்தை அனுப்பி வைத்துள்ளார். ராமர் மற்றும் அயோத்தி கோவில் படங்கள் அச்சிடப்பட்ட சேலைகள் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி, 5,000 அமெரிக்க வைரங்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ் மற்றும் 2 கிலோ வெள்ளி அனுப்பி வைத்துள்ளார்.

குஜராத்தின் வதோதராவை சேர்ந்த விவசாயி அரவிந்த்பாய் மங்கள்பாய் படேல் என்பவர், 1,100 கிலோ எடை உடைய பிரமாண்ட விளக்கை பரிசளித்துள்ளார்.

கர்நாடகாவின் ஹம்பியில் உள்ள ஹனுமன் பிறந்த பூமியான கிஷ்கிந்தாவில் இருந்து புறப்பட்ட ரதம், அயோத்தியை வந்தடைந்தது. சீதை பிறந்த ஊரான நேபாளத்தின் ஜனக்புரி உட்பட நம் நாட்டின் பிற பகுதிகளுக்கு சென்ற இந்த ரதத்துடன் 100 பக்தர்கள் உடன் பயணித்தனர்.

கடந்த இரண்டு மாதங்களாக பயணம் மேற்கொண்ட இந்த ரதம் 40 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், ராமர், சீதை, லட்சுமணன், ஹனுமன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவக்குழு தயார்!

ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் திரளவுள்ளதை அடுத்து, பாதுகாப்பு ஏற்பாடு களுடன் மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.இது குறித்து, அயோத்தி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சய் ஜெயின் நேற்று கூறியதாவது:பக்தர்களின் நலன் கருதி, அயோத்தியின் 16 முக்கிய இடங்களில், முதலுதவி குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு டாக்டர், ஒரு மருந்தாளுனர், ஒரு மருத்துவ உதவியாளர் இருப்பர்.ஒவ்வொரு குழுவிடமும் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் மற்றும், ‘நெபுலைஸர்’ வசதிகள், ரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கருவிகள், மருந்துகள் தயார் நிலையில் இருக்கும். இது தவிர, 10 முதல் 20 படுக்கை வசதிகளுடன் இரண்டு மருத்துவமனைகள், 40 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் இருக்கும். அவசரகால தேவைகளுக்காக மாவட்ட மருத்துவக் கல்லுாரி உட்பட ஐந்து மருத்துவமனைகளில் 190 படுக்கைகள் தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ஜிலேபி வழங்கும் அதானி!

எப்.எம்.சி.ஜி., நிறுவனமான, ‘அதானி வில்மர்’ குழுமம், தங்கள் தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தி, உணவுப் பொருட்கள் தயாரித்து அயோத்தியில் வினியோகிக்க உள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கு, 25,000 ஜிலேபிக்களை வினியோகிக்க உள்ளது. அவை தவிர, 5,000 பேருக்கு ஒரு நாள் விருந்து, பல்வேறு நொறுக்கு தீனி வகைகளை வினியோகிக்கவும் திட்டமிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.