“ஊடக சந்திப்பில் மீண்டும் அநாகரிகம்… அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!” – மார்க்சிஸ்ட்

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நெறியாளர் குறித்து அநாகரிகமாக பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும், அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் செய்தித் தொலைக்காட்சி நெறியாளரை நோக்கி முற்றிலும் அநாகரிகமாக, தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதற்கான அதிகாரத்தை அண்ணாமலைக்கு யார் கொடுத்தது? அவர் சார்ந்துள்ள பாஜக, மத்திய அரசாக உள்ளது என்பது தரமற்று பேசுவதற்கான உரிமத்தை வழங்குகிறதா?

இந்த அநாகரிக நடத்தையை பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கண்டித்துள்ள பிறகும், அண்ணாமலை தனது பேச்சை நியாயப்படுத்தியுள்ளார். கொங்கு பகுதி மக்களையும், கிராமப்புற மக்களையும் அதற்கு ஆதரவாக குறிப்பிட்டு அவமதித்துள்ளார். பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பின்னர், இதுபோல அநாகரிகமாக பேசுவதும், ஊடகங்களை தரந்தாழ்ந்து விமர்சிப்பதும் இது முதல்முறை அல்ல. ஊடக நிருபர்கள் குரங்கு போல் தாவுகிறார்கள் என்றார்; தனது ரபேல் கைக்கடிகாரத்திற்கு கணக்குக் காட்ட முடியாதபோது ஒரு நிருபரை நோக்கி அநாகரிகமாக கூச்சலிட்டார்.

ஊடக நிருபர்களை நோக்கி பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என செய்தியாளர் சந்திப்பிலேயே பேசி அவமதித்தார். இதுபோல வேண்டுமென்றே தொடர்ந்து கண்ணியமற்று பேசிவரும் அண்ணாமலை இப்போது அநாகரிகத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளார். மாறுபட்ட கொள்கைகள் இருந்தாலும், கண்ணியம் தவறக் கூடாது என்பது அரசியல் நியதி. பாஜகவும், அதன் தலைவரும் இந்த நியதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக தங்களைக் கருதிக்கொள்கின்றனர்.

அண்ணாமலையின் இந்தப் போக்கினை வன்மையாக கண்டிப்பதுடன், பொது வெளியில் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.