சென்னை: “கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி இல்லை” என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இவ்வாறு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மேலும் பேசுகையில், “தற்போதைய நிலையில் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்த போதுமான இடவசதி இல்லை. மேலும் அங்கு ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடம் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. பணிகள் அனைத்தும் முடிந்து ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்ற வசதி ஏற்படுத்திதந்தால் பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றுவோம்.
எனவே கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செயல்படும். கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் வரும் வரை இதே நிலை தான் நீடிக்கும். ஏனென்றால், ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் வர மக்கள் சிரமப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். ஆம்னி பேருந்துகளை ஜனவரி 24ம் தேதியே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மாற்ற வேண்டும் என்பது முடியாத காரியம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதுமான இடவசதியை தமிழக அரசு ஏற்படுத்தித்தர வேண்டும். அதன்பின்னரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு ஆம்னி பேருந்துகளின் முழுமையான செயல்பாட்டை மாற்றுவோம்” இவ்வாறு உறுதிபட தெரிவித்தனர்.