லேப்டாப் ரொம்ப சூடாகுதா… இவை தான் முக்கிய காரணம் – என்ன தீர்வு?

Laptop Overheating Solution Tips In Tamil: ஸ்மார்ட்போனை போன்று மடிக்கணினியும் அன்றாட வாழ்வில் இன்றியமையாத சாதனமாகிவிட்டது. குறிப்பாக, கோவிட் பெருந்தோற்றுக்கு பின்னர், லேப்டாப்பின் தேவை என்பது அனைத்து துறைகளிலும் தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது. எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எளிதாக வேலை செய்துகொள்ளலாம் என்பதால் பணியில் இருப்பவர்களுக்கு லேப்டாப் கவச குண்டலம் போல் ஆகிவிட்டது.

என்ன பிரச்னை?

லேப்டாப்பை நாம் வேலை, படிப்பு, பொழுதுபோக்கு மற்றும் பல நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகிறோம். குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளுக்கும், பெரியவர்கள் தங்கள் அலுவலக வேலைகளுக்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள். 

அந்த வகையில், உங்கள் லேப்டாப் அதிக வெப்பமடைய ஆரம்பித்தால் அது பெரிய பிரச்சனையாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிக வெப்பம் மடிக்கணினியின் செயல்திறனைக் குறைக்கும். அதன் வன்பொருள்களை (Hardware) சேதப்படுத்தும். உங்கள் மடிக்கணினி அதிக வெப்பமடைகிறது என்றால், டிப்ஸ்களை பின்பற்றி, மேற்கொண்டு பிரச்னை ஆகாதவாறு பார்த்துக்கொள்ளலாம். அதற்கு, லேப்டாப் எளிமையாக அதிக வெப்பமடைவதற்கான முக்கிய காரணங்களை முதலில் காணலாம்.

லேப்டாப்பை அணைக்காமல் நீண்ட நேரம் பயன்படுத்துவது, லேப்டாப்பை வெதுவெதுப்பான இடத்தில் வைத்திருப்பது, லேப்டாப்பின் உள்ளே தூசி அல்லது அழுக்கு குவிதல், மடிக்கணினியின் குளிரூட்டும் அமைப்பில் ஏற்படும் செயலிழப்பு ஆகியவை எளிமையாக சாதனம் சூடாவதற்கான காரணங்களாகும். 

லேப்டாப் சூட ஏறாமல் இருக்க டிப்ஸ்…

– லேப்டாப்பை அணைக்காமல் நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம். நீண்ட நேரம் லேப்டாப்பை உபயோகிக்க நேர்ந்தால் இடையில் சிறிது நேரம் அணைத்து விடுங்கள்.

– லேப்டாப்பை வெப்பமான இடத்தில் வைக்காதீர்கள். மடிக்கணினியை எப்போதும் குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். லேப்டாப்பை உங்கள் தொடைகளில் வைத்து பயன்படுத்தினாலும், அதிக வெப்பம் ஏற்படும்.

– லேப்டாப்பின் உள்ளே தூசி அல்லது அழுக்கு படிவதை அனுமதிக்காதீர்கள். மடிக்கணினிக்குள் தூசி அல்லது அழுக்கு குவிவதால், குளிரூட்டும் அமைப்பு சரியாக செயல்பட முடியாது. இதன் காரணமாக லேப்டாப் அதிக வெப்பமடையக்கூடும். எனவே, மடிக்கணினியின் உட்புறத்தை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.

– மடிக்கணினியின் குளிரூட்டும் அமைப்பில் கோளாறு இருந்தால், உடனடியாக சரிபார்ப்பு மையத்தில் கொடுத்து அதை சரிசெய்யவும்.

– முக்கியமாக, அதிக நேரம் சார்ஜ் போட்டுக்கொண்டே லேப்டாப்பை பயன்படுத்துவதும் அவை சூடாவதற்கான காரணமாகும்.

இவற்றை பின்பற்றுவதன் மூலம் உங்கள் லேப்டாப் அதிக வெப்பமடையாமல் பாதுகாக்கலாம். மேலும், உங்கள் மடிக்கணினி தொடர்ந்து இன்னும் சூடாகி வந்தால், நீங்கள் மடிக்கணினியை ஒரு நிபுணரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | எக்ஸ் மூலம் இனி ஆடியோ, வீடியோ கால் செய்யலாம்
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.