அயிஸ்வால்: நமது அண்டை நாடான மியான்மரில் நடக்கும் உள்நாட்டு போர் காரணமாக அந்நாட்டு ராணுவ வீரர்கள், மிசோரமில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இச்சூழ்நிலையில், மியான்மர் எல்லையில் வேலி அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ராணுவத்தினருக்கும், ஆயுதக்குழுவினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால், அங்கிருந்து பலர் இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. அந்நாட்டு ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாமை அரக்கன் என பெயர் கொண்ட ஆயுதக்குழு ஒன்று கைப்பற்றியது. இதனையடுத்து அங்கிருந்த 600 ராணுவ வீரர்கள், எல்லை தாண்டி வந்து மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில் அடைக்கலம் புகுந்தனர். அவர்கள் அசாம் ரைபிள்ஸ் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு நிலவும் சூழ்நிலை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், முதல்வர் லால்துஹோமா ஆலோசனை நடத்தினார்.
கவுகாத்தியில் போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு பிறகு அமித்ஷா கூறியதாவது: மியான்மர் எல்லையில் கட்டுப்பாடு இல்லாமல் நடமாடுவதை தடுக்க வேலி அமைக்கப்படும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement