`ராஜா ராணி’ சீசன் 2 தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் விஜே அர்ச்சனா. தொகுப்பாளினியாக பயணித்தவரை நடிகையாக்கியது இந்தத் தொடர் கொடுத்த முக்கிய வாய்ப்புதான். இந்தத் தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார் அர்ச்சனா.

இந்தத் தொடர் இவருக்கென தனி அடையாளத்தைப் பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நடந்து முடிந்த தமிழ் ‘பிக் பாஸ்’ சீசன் 7-ல் அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனார். அந்த வெற்றிக் கோப்பையைத் தன்னை சின்னத்திரை நடிகையாக அறிமுகப்படுத்திய இயக்குநர் பிரவின் பென்னட்டிடம் கொடுத்து வாழ்த்துகள் பெற்றிருக்கிறார்.
இது தொடர்பாக அர்ச்சனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எப்பவும் உங்களுடைய மாணவி’ என்கிற கேப்ஷனுடன் பதிவிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.
சின்னத்திரை நடிகராக நமக்கு பரிச்சயமானவர் வேணு அரவிந்த். ‘அலைகள்’ தொடங்கி சன் டிவியில் ‘வாணி ராணி’ தொடர் வரை பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில், ‘ஓ மணப்பெண்ணே’ படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்குத் தந்தையாகவும் நடித்திருந்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகள் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். பிறகு அவர் அளித்த பேட்டி ஒன்றில் பக்கவாதம் ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வருவது தொடர்பாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பொதிகை தொலைக்காட்சியில் நேற்றிலிருந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `தாயம்மா குடும்பத்தார்’ தொடரில் நடிகை ராதிகாவின் கணவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வீல் சேரில் அவர் நடிப்பது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்தாலும் மீண்டும் அவரைத் திரையில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பலர் கமென்ட் செய்து வருகின்றனர். வாழ்த்துகள் வேணு சார்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் டைமிங்கில் தற்போது சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வருகிற திங்கள் (22-01-2024) முதல் முக்கியமான தொடர்களின் ஒளிபரப்பில் மாற்றங்கள் நிகழவிருக்கின்றன.
மாலை 6 மணிக்கு சீதா ராமன், 6.30 மணிக்கு நளதமயந்தி, 7 மணிக்கு மீனாட்சி பொண்ணுங்க, 7.30 மணிக்கு நினைத்தேன் வந்தாய் ஆகியவை ஒளிபரப்பாக இருக்கின்றன. 8.30 மணிக்கு அண்ணா, 9 மணிக்கு கார்த்திகை தீபம், 9.30 மணிக்கு சந்தியாராகம் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.