Worlds largest lock, 1,265 kg laddoo Prasad arrive in Ayodhya as Ram Temple Pran Pratishtha approaches | உலகின் மிகப்பெரிய பூட்டு, 1,265 கிலோ லட்டு அயோத்தி வந்தடைந்தது

அயோத்தி: உ.பி., மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (ஜன.,22) நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, உலகம் முழுவதும் மற்றும் உள்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து கடவுள் ராமர் மீது பக்தி கொண்டவர்கள் பல்வேறு வகையான பொருட்களை அயோத்திக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், ராம பக்தர்களால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய பூட்டு (400 கிலோ எடை கொண்டது) மற்றும் 1,265 கிலோ லட்டு பிரசாதம் ஆகியவை அயோத்தி வந்தடைந்தது. இவை கோயில் நிர்வாகத்திடம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்ரீராம் கேட்டரிங் சர்வீசஸ் என்ற நிறுவனம் 1,265 கிலோ எடையில் லட்டுவை தயாரித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நாகபூஷணம் ரெட்டி கூறுகையில், எனது குடும்பத்திற்கும், தொழிலுக்கும் கடவுள் ஆசி வழங்கி உள்ளார். நான் உயிருடன் இருக்கும் வரை தினமும் 1 கிலோ லட்டு தயாரிக்க வேண்டும் என உறுதி ஏற்றுள்ளேன். அயோத்தி ராமர் கோயிலுக்காக தயாரிக்கப்பட்ட லட்டுவிற்கு உணவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து சான்றிதழ் பெற்றுள்ளேன். ஒரு மாதம் ஆனாலும் கெடாது. 3 நாட்களில் 25 பேர் 1,265 கிலோ லட்டுவை தயாரித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

உலகின் மிகப்பெரிய பூட்டை, உ.பி., மாநிலம் அலிகார்க்கை சேர்ந்த முதிய தம்பதி சத்ய பிரகாஷ் சர்மா மற்றும் ருக்மினி சர்மா ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்தனர். சத்ய பிரகாஷ் சர்மா சமீபத்தில் காலமானார். இந்த பூட்டை அயோத்தி கோயிலுக்கு வழங்க வேண்டும் என்பது அவரது ஆசை.

அதனை நிறைவேற்றும் வகையில், இந்த பூட்டுக்கு பூஜை செய்த பிறகு வாகனம் மூலம் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 400 கிலோ எடை கொண்ட இந்த பூட்டு, கிரேன் உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்டது. இதனைப் பார்க்க அப்பகுதியினர் ஏராளமானோர் கூடினர். வாகனத்தில் பூட்டு ஏற்றப்பட்ட உடன் ‛ஜெய் ஸ்ரீராம்’ என உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.