அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: இமாச்சல பிரதேசத்தில் நாளை பொதுவிடுமுறை

சிம்லா,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது.

நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம் 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக இருக்கும். கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம், மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களை கொண்டுள்ளது.

கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில், கோவில் வளாகம் முழுவதும் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி நகருக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை அமைப்புகளுக்கு நாளை பிற்பகல் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய பணியாளர் நல அமைச்சகம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி, இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு நாளை பொது விடுமுறை என்று அம்மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார். ஏற்கனவே பல மாநிலங்கள் பொதுவிடுமுறை அறிவித்த நிலையில் அந்த வரிசையில் இமாச்சல பிரதேசமும் இடம்பெற்றுள்ளது. முன்னதாக சத்தீஷ்கார் மாநிலத்துக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.