அமைச்சரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாநில அளவிலான இளைஞரணி மாநாடு `மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில் சேலத்தில் இன்று தொடங்கியது. காலை 9 மணியளவில், தி.மு.க துணை பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, கட்சிக் கொடியை ஏற்றிவைக்க மாநாடு தொடங்கியது. காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தி.மு.க இளைஞரணி, `திராவிட மாடல்- எல்லோருக்கும் எல்லாம்’ உள்ளிட்ட 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் பங்குபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், `ஆளுநர் பதவியை நீக்க வேண்டும்’, `கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்’, `பல்கலைக்கழக வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும்’ உட்பட 25 தீர்மானங்களை உதயநிதி முன்மொழிந்தார்.

இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உட்பட மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து மாலையில் உரையாற்றிய உதயநிதி, “பத்தாண்டு கால பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டக்கூடிய படை இங்கிருந்து புறப்பட தயாராக இருக்கிறது. இந்த ஜனவரி 21 என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நாள். மாநில உரிமைகளை பறிப்பதையே ஒன்றிய அரசு முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கிறது. அடிமை அ.தி.மு.க-வின் உதவியுடனும், தவழ்ந்து தவழ்ந்து முதல்வரான பழனிசாமியின் துணையோடும்தான் நம் உரிமைகளை ஒன்றிய அரசு பறித்தது. கல்வி, சுகாதாரம் என எல்லா துறைகளிலும் மாநில அரசின் உரிமைகளை சட்டத்துக்கு புறம்பாக ஒன்றிய அரசு பறித்து வைத்திருக்கிறது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாடு வரியாக கட்டியிருக்கிறது. ஆனால், அவர்கள் திருப்பி கொடுத்தது வெறும் ரூ.2 லட்சம் கோடிதான். இதனால் மாநில அரசு மக்களுக்கான திட்டங்களை செய்ய முடியாத சூழலை ஒன்றிய அரசு ஏற்படுத்துகிறது. நம்முடைய கல்வி, மொழி, நிதி, வேலைவாய்ப்பு உரிமைகள் பறிப்பு, அதிகார குறைப்பு, பண்பாட்டு ரீதியான தாக்குதல் என நம்மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதலை ஒன்றிய அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை என்று கூறி ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கொண்டு வருகிறார்கள். நீட் மிகப்பெரிய உயிர்க் கொல்லி நோயாக மாறியிருக்கிறது. அனிதா முதல் ஜெகதீஸ்வரன் 11 குழந்தைகள் இதுவரை இறந்திருக்கிறார்கள். இப்போது மருத்துவம் மட்டும் இல்லாமல், எல்லா பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு வரப்போகிறது என்கிறார்கள்.

மொழி நம்முடைய உரிமை மட்டுமல்ல, நம்முடைய உயிர். தமிழ் மொழியை அழிக்க நினைத்தால், எங்கள் உயிரை கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். 2,000 வருடங்களாக தமிழ்நாட்டில் கால் வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், இன்னும் 2,000 வருடங்கள் ஆனாலும் உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற முடியாது. தமிழரின் அடையாளத்தை அழிக்க நினைத்தால், நீங்கள்தான் அழிந்து போவீர்கள். நாங்கள் ED-க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கு பயப்பட மாட்டோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி என 40 இடங்களிலும் நம்முடைய இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். நம் முதல்வர் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்து இந்திய பிரதமராக வரவேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற இருக்கிறது. பாசிஸ்ட்டுகளின் காலம் முடிவுக்கு வரவிருக்கிறது. இந்தியா முழுவதும் காவி சாயம் பூச நினைக்கின்ற பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவதே லட்சியம்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY