மாமியார் ஆசையை நிறைவேற்றிய குஷ்பு: பிரதமர் மோடி தலையில் கை வைத்து ஆசி வழங்கிய குஷ்பு மாமியார்

பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார். இவரின் 92 வயதாகும் மாமியார் தெய்வானை சிதம்பரம் பிள்ளை, பிரதமர் மோடியின் தீவிர ரசிகை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதற்கு பிரதமரை சந்தித்து வாழ்த்து கூற வேண்டும் என்றும், மோடியை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுக்குமாறும் குஷ்புவிடம் தெய்வானை கேட்டு வந்துள்ளார்.

மாமியாரின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கில் பிரதமர் மோடியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, தமிழகம் வரும்போது தெய்வானையை கட்டாயம் சந்திப்பதாக மோடி கூறியுள்ளார். தற்போது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை துவக்கி வைப்பதற்காக கடந்த 19ம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கில் போட்டியை துவக்கி வைத்துவிட்டு, விளையாட்டு அரங்கில் உள்ள ஒரு அறையில், தெய்வானையை சந்தித்தார்.

அப்போது, மோடியின் கைகளை பற்றிக்கொண்ட தெய்வானை, ராமர் கோயில் கட்டியதற்கு அவரை பாராட்டினார். அதைகேட்டு மோடி, ராமர்கோயில் கட்ட தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பைதான் பாக்கியமாக கருதுவதாக தெய்வானையிடம் தெரிவித்தார். தொடர்ந்து, மோடியின் கைகளை பற்றிக்கொண்டே பேசிக்கொண்டிருந்த தெய்வானை, 'ராமர் போல உங்கள் புகழ் இந்த உலகம்இருக்கும் வரை நிலைத்து நிற்கும்' என வாழ்த்தினார்.

இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த குஷ்பு, அதில் கூறியிருப்பதாவது: 92 வயதாகும் என் மாமியார் தெய்வானை சிதம்பரம் பிள்ளை மோடியின் தீவிர ரசிகை. என் மாமியாரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. மோடியை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்பது என் மாமியாரின் கனவு; அதனால் அவரை சந்தித்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மிகவும் பிரபலமான, அனைவராலும் நேசிக்கப்படும் தலைவரான நம் பிரதமர் என் மாமியாரை அன்புடனும், மரியாதையுடனும் வரவேற்றார்.

ஒரு மகன் தன் தாயிடம் பேசுவதுபோன்று அன்புடன் பேசினார் அவர். அவரை அனைவரும் கொண்டாடுவதில் ஆச்சரியம் இல்லை. கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர், தேர்வு செய்யப்பட்டவர் அவர். சார், உங்களை சந்தித்த நிமிடங்கள் என்றும் கொண்டாடப்படும். என் மாமியார் கண்ணில் குழந்தை போன்ற சந்தோஷத்தை பார்த்தேன். இந்த வயதில் அவர் சந்தோஷமாக இருப்பதை தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லை. உங்களுக்கு என்றும் கடன்பட்டிருக்கிறேன் பிரதமரே. உங்களுக்கு கோடி வணக்கங்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.