அயோத்தி: ராமர் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து நன்கொடை, காணிக்கைகள் குவிந்து வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அனுப்பப்பட்ட காணிக்கைகளை விஎச்பி தலைவர் அலோக் குமார் நேற்று கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
இதுதொடர்பாக அலோக் குமார் கூறியதாவது: காஷ்மீர் முஸ்லிம் சகோதரர்கள், சகோதரிகள் என்னை சந்தித்து ராமர் கோயில் கட்டப்படுவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ‘‘நாம்வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், நமது மூதாதையர் ஒருவரே. அந்த வகையில் பகவான் ராமரும் எங்கள் மூதாதையர்களில் ஒருவர்’’ என்று காஷ்மீர் முஸ்லிம்கள் கூறினர்.
ராமர் கோயிலுக்காக 2 கிலோ குங்குமப்பூவை அவர்கள் வழங்கினர். அதை, ராம ஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ராவிடம் வழங்கினேன். இவ்வாறு அலோக் குமார் தெரிவித்தார்.
ராஜஸ்தானின் மெஹந்திபூர் பாலாஜி கோயில் சார்பில் 1,51,000 பெட்டிகளில் லட்டு பிரசாதம் ராமர் கோயிலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கோயில் சார்பில் 7,000 போர்வைகளும் வழங்கப்பட்டு உள்ளன.
குஜராத்தின் வதோதரா பகுதியை சேர்ந்த ராம பக்தர் விகா பர்வத், 108 அடி நீளம் கொண்ட ஊதுபத்தியை வழங்கினார். இது 3,610 கிலோ எடை கொண்டதாகும். அயோத்தி ராமர் கோயிலில் கடந்த 16-ம் தேதி 108 அடி நீள ஊதுபத்தி ஏற்றப்பட்டது. இதன் மணம் 50 கி.மீ. தொலைவு வரை பரவுகிறது.
உ.பி. அலிகரை சேர்ந்த சத்யபிரகாஷ் சர்மா அவரது மனைவி ருக்மணி ஆகியோர் 400 கிலோ எடையில் பிரம்மாண்ட பூட்டை தயார் செய்தனர். சத்ய பிரகாஷ் சர்மா உயிரிழந்துவிட்ட நிலையில் மகாமண்டலேஷ்வர் அன்னபூர்ணா பாரதி புரி என்பவர்பூட்டு தயாரித்து நேற்று கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
தமிழ்நாட்டின் பட்டு உற்பத்தியாளர்கள் சார்பில் ராமர் படம்பொறித்த பட்டு போர்வை காணிக்கையாக வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் காபூல் நதி புனித நீர் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த புனித நீரை விஎச்பி தலைவர் அலோக் குமார் நேற்று கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்.
நேபாளத்தில் இருந்து வெள்ளிபாதுகை, ஆபரணங்கள், ஆடைகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட பரிசுகள் ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், 5,000 வைரங்கள் பதிக்கப்பட்ட நெக்லஸை அயோத்தி ராமர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.