புதுடில்லி, நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப் பேக்’ எனும் போலி ஆபாச வீடியோவை உருவாக்கி பரப்பிவிட்ட நபரை டில்லி போலீசார் கைது செய்தனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் வீடியோவில் வேறொரு நபரின் முகத்தை அசல் போன்றே பொருத்துவதை ‘டீப் பேக்’ என்கின்றனர்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து கடந்த ஆண்டு வீடியோ வெளியானது.
இதன் வாயிலாக டீப் பேக் தொழில்நுட்பத்தின் ஆபத்தை உணர்ந்த மத்திய அரசு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து டில்லி போலீசின் நுண்ணறிவு பிரிவினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
டீப் பேக் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட இணைய முகவரியின் அமைவிடம் பற்றிய தகவல்களை, சமூக வலைதள நிறுவனமான மெட்டாவிடம் பெற்றனர்.
அதன் அடிப்படையில், டீப் பேக் வீடியோ உருவாக்கிய நபரை டில்லி போலீசார் நேற்று கண்டுபிடித்தனர்.
தென் மாநிலத்தைச் சேர்ந்த அவரை விசாரணைக்காக டில்லி அழைத்துச் சென்றனர்.
அவரது மொபைல் போன், லேப்டாப் போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். அவரது பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
 
Advertisement