தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான சோப் மைசூர் சாண்டல். 1916-ம் ஆண்டு முதல் கர்நாடகா அரசின்கீழ் செயல்பட்டு வரும் கர்நாடகா சோப்ஸ் அண்ட டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) எனும் பொதுத்துறை நிறுவனம் இந்த சோப்பை உற்பத்தி செய்துவருகிறது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் மோசடி கும்பல் ஒன்று, போலியான மைசூர் சாண்டல் சோப்பை தயாரித்து வருவதாக, மாலக்பேட் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

ஜனவரி 12 அன்று, தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் மற்றும் KSDL தலைவர் பி.பிரேம் குமார் ஆகியோரிடம் இந்த போலி தயாரிப்புகள் குறித்து எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, மைசூர் சாண்டல் சோப், KSDL போலி தயாரிப்புகள் குறித்து விசாரணை நடத்தியது. அதற்காக ரூ.5 லட்சம் மதிப்பிலான போலி பொருள்களை வாங்கி சோதனை செய்தனர். மேலும், இந்தப் பொருள்கள் போலியாக எங்குத் தயாரிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை. எனவே, KSDL ஊழியர்கள் ரூ.25 லட்சம் மதிப்புள்ள சோப்புகளுக்கு போலி தயாரிப்பு நிறுவன முகவர்களிடம் ஆர்டர் செய்தனர்.
மேலும், சரக்குகளை எடுப்பதுபோல போலி சோப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அரசு அதிகாரிகள் சென்றனர். அங்கிருந்து, 47 அட்டைப்பெட்டிகளில் மொத்தம் 9,400 சோப்புகள் எடுத்துவரப்பட்டு, KSDL ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், போலி சோப்புகளில் உயர்தர சந்தன எண்ணெய் இல்லை என்றும், புற்றுநோயை உண்டாக்கும் பொருள்கள் இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

சோப்பு மட்டுமல்லாமல், நெய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பிற பிரபலமான பிராண்டட் பெயர்களிலும் போலித் தயாரிப்புகள் இருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் போலியான தயாரிப்புகள் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவந்திருக்கிறது. அதன் மூலம் சுமார் ரூ.500 முதல் ரூ.600 கோடி வரை லாபம் ஈட்டியிருக்கிறார்கள்.
இந்தத் தொகை அத்தனையும் அரசுக்கு இழப்பு. இந்த விவகாரம் தொடர்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ராகேஷ் ஜெயின், மஹாவீர் ஜெயின் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, “போலி சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இரண்டு நபர்களும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் தெலங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங், சித்தப்பூர் பா.ஜ.க தலைவர் மணிகாந்த் ரத்தோட், முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ வால்மீகி நாயக்கின் மகன் விட்டல் நாயக் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள். இது தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY