Tamil Nadu food at Ayodhya Nagarthar Inn | அயோத்தி நகரத்தார் விடுதியில் தமிழக சாப்பாடு

இப்போது எல்லா பாதைகளும் அயோத்தியை நோக்கித்தான்; எல்லாரது பார்வையும் ராமர் கோவில் மீதுதான்.

அதற்கு காரணம், இங்கு கட்டப்பட்டு விரைவில் திறப்பு விழா காணவுள்ள பிரமாண்டமான ராமர் கோவில் .

தமிழகத்தில் உள்ளவர்கள் பலருக்கும் ராமர் கோவில் கும்பாபிேஷகத்தின் போதோ அல்லது அதன்பிறகோ ராமர் கோவிலைப் போய் பார்க்கவேண்டும் என்ற தணியாத ஆவல் ஏற்பட்டுள்ளது.

போக விரும்புபவர்களுக்கு மொழிப்பிரச்னையை தாண்டி தங்குமிடமும், சாப்பாடு பிரச்னை யும் தான் முன் நிற்கின்றன.

காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்ட நகரத்தார்கள் பல்வேறு புண்ணிய தலங்களுக்கு போகும் வழக்கமுடையவர்கள். அப்படிப் போகும் போது அங்கே தங்குவதற்கும், உணவிற்கும் சிரமப்படக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே விடுதி ஒன்றைக்கட்டி நன்கு பராமரித்து வருகின்றனர்.

காசியில் உள்ள நகரத்தார் விடுதி மிகவும் பிரபலம். அதே போல கயா, அலகாபாத் மற்றும் அயோத்தியிலும் நகரத்தார் விடுதி உள்ளது.

அயோத்தியில் உள்ள நகரத்தார் விடுதி 1890 (கிட்டத்தட்ட 133 ஆண்டுகள்)ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அதன் முழுவிலாசம் மற்றும் போன் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

latest tamil news

அந்த காலத்தில் எப்படி இருந்ததோ அதே போலத்தான் விடுதி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இரண்டு பெரிய ஹால்களும், ஒரு அடுக்களையும், மூன்று குளியலறையும், கழிப்பறைகளும் உள்ளன. வரக்கடிய யாத்ரீகர்களுக்கு பாயும், தலையணையும் கொடுக்கப்படும். மூன்று வேளையும் இட்லி, பொங்கல், சாப்பாடு என்று தமிழக உணவு அதிலும் குறிப்பாக செட்டிநாடு சைவ உணவு வழங்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் 120 பேர் வரை விடுதியில் தங்கலாம். லாப நோக்கமில்லாமல் சேவை நோக்கத்துடன் செயல்படும் இந்த நகரத்தார் விடுதியில் தங்குவதற்கும், உணவிற்கும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. விடுதியில் சிறிய ராமர் சன்னிதியும் உள்ளது.

விடுதிக்கு சொந்தமாக கடைகள் உள்ளன. விடுதிக்கு சராசரியாக தினமும், 50 பேர் வரை வந்து செல்கின்றனர். ஆனால், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு பின் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்பதால், அதற்கேற்ப விடுதியை மேம்படுத்தவும், விரிவு படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

வரக்கூடியவர்கள் தங்களது வருகை விபரத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டுச் செல்லவேண்டும்.

Ayodhya Nattukot Nagara Chatram,Nattukot Sri Ram Mandir, Baboo Bazaar, Ayodhya- 224123, U.P. – India. : 7311166233, 7373070733

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.