'சிக்லெட்ஸ்' படத்தில் 30 நிமிட காட்சியை நீக்கிய பாக்யராஜ்

'திறந்திடு சீசே' படத்தை இயக்கிய எம்.முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய படம் 'சிக்லெட்ஸ்'. இதில் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார்.

இன்றைய இளைஞர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த படத்தை எஸ்.எஸ்.பி பிலிம்ஸ் சார்பில் ஏ.சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். பிப்ரவரி 2ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

படம் பற்றி இயக்குனர் முத்து கூறியதாவது: இந்தப் படத்தில் நாங்கள் ஒரு நல்ல விசயத்தைத்தான் சொல்லி இருக்கிறோம். இப்படத்திற்கு பிரபலமானவரின் பின்னணி குரல் அவசியம் என்பதை உணர்ந்தோம். இதற்காக இயக்குநர் பாக்யராஜை தொடர்பு கொண்டோம். அவர் படத்தை பார்த்துவிட்டு சில நிறைகுறைகளை சுட்டிக்காட்டினார். அவர் பார்க்கும் போது இந்த படத்தின் கால அவகாசம் இரண்டரை மணி நேரம். அவர் சுட்டிக் காட்டிய குறைகளை நீக்கிய பிறகு இரண்டு மணி நேர படமானது. 30 நிமிட காட்சிகளை நீக்கி விட்டோம். இதற்காக இயக்குநர் பாக்கியராஜுக்கு நன்றி.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸை என்னுடைய உதவியாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. படத்தில் இடம் பெறும் மூன்று கதாபாத்திரங்களுக்கும் நியாயப்படுத்தும் வகையில் கிளைமாக்ஸ் இருந்தது. தயாரிப்பாளருக்கு நான் சொன்ன கிளைமாக்ஸ் பிடித்திருந்தது. பாக்யராஜூம் அதற்கு ஒப்புதல் தெரிவித்தார். கண்டிப்பாக இப்படத்தின் கிளைமாக்ஸ் படம் வெளியான பிறகு பேசப்படும். மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்.

கிளைமாக்ஸ் புதிது இல்லை என்றாலும், இது இருந்தால்தான் பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும். இது யாருக்குத் தேவை? யாருக்கு தேவை இல்லை? என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறோம். எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. நம்மால் ஒரு விசயத்தை சாதிக்க முடியும் என்று நினைப்பவர்களுக்கு இந்த சமுதாயத்தை எதிர்த்து வாழ முடியும் என்று நினைப்பவர்களுக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. ஒருத்தருடைய ஆதரவில் தான் மற்றவர்களால் வாழ முடியும் என்றால், நிச்சயமாக அவர்கள் ஆயுள் முழுவதும் அடுத்தவர்களை சார்ந்து தான் வாழ்வார்கள். இதைத்தான் நான் இப்படத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.